Published : 10 Jun 2023 12:20 AM
Last Updated : 10 Jun 2023 12:20 AM
மதுரை: சமூக வலைதளங்களில் முதல்வரை விமர்சிக்கும் பாஜகவினரை உடனடியாக கைது செய்யும் போலீஸார், பிரதமரை விமர்சிப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் மாநகர் மாவட்ட பாஜக சார்பில் மக்கள் தொடர்பு பேரியக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி ஆட்சியில் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்களால் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா அனைத்து துறையிலும் முன்னேறியுள்ளது.
இந்த 9 ஆண்டுகளில் பாஜக அரசு மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. மாநில அரசு பொங்கல் இனாம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகிறது. இந்தியா சீனாவை விட இரு மடங்கு டிஜிட்டல் துறையில் வளர்ச்சியடைந்துள்ளது. விருதுநகரில் ரூ.2000 கோடியில் மத்திய அரசு ஜவுளி பூங்கா அறிவித்தது. இதனை தமிழக அரசு தனது திட்டம் என்று கூறி பொதுமக்களை ஏமாற்றி வருகிறது.
வெளிநாடுகளில் இந்தியாவின் பெருமைகளை ராகுல் காந்தி விமர்சனம் செய்வது கண்டிக்கதக்கதாகும். தொழில் முதலீடுக்காக ஜப்பான் சென்ற முதல்வர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி திரட்டியிருந்தால் பாராட்டியிருக்கலாம். சமூக வலைதளங்களில் பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள்மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால் தமிழக முதல்வர் குறித்து அவதூறு பேசும் பாஜகவினர் உடனடியாக கைது செய்யப்படுகின்றனர். மதுரை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள 2000 ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும். ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், பொது செயலாளர்கள் குமார், பாலகிருஷ்ணன், ராஜ்குமார், துணைத்தலைவர் ஜெயவேல், இணைப் பொருளாளர் சத்தியம் செந்தில்குமார், ஊடகப் பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT