சென்னை: சென்னை, நாகப்பட்டினம், கடலூர் போன்ற புயலால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பலவீனமாக உள்ள பதாகைகளை கண்டறிந்து அவற்றை அகற்ற, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தென்மேற்குப் பருவமழை ஆயத்த பணிகள் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தென்மேற்குப் பருவமழை குறித்த ஆயத்த பணிகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு, தலைமையில் வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் தொடர்புடைய துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர், இவ்வாண்டு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் மழைப்பொழிவு பொதுவாக இயல்பாகவே இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் தென்மேற்குப் பருவமழை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆயத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
பின்னர், பல்வேறு துறைகளின் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் ஒன்றிய அரசுத் துறை அலுவலர்கள், தென்மேற்குப் பருவமழையினை திறம்பட எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துரைத்தனர். இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்கள்:
- சென்னை மாநகராட்சி பகுதிகளில், மழை நீர் தேங்காத வண்ணம் அனைத்து மழை நீர் வடிகால்களில் தூர் வாரும் பணி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
- அனைத்து சுரங்கப் பாதைகளும் ஆய்வு செய்யப்பட்டு, வடிகால்கள் தூர் வாரப்பட வேண்டும். மேலும், சுரங்கப் பாதைகளில் அமைக்கப்பட்டுள்ள உணர்விகள் (sensors) சரியாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். தேங்கி இருக்கும் மழை நீரை உடனடியாக வெளியேற்றும் வகையில், தானியங்கி மோட்டார் பம்ப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கும் நேர்வுகளில், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு மாற்றுப் பாதையில் செல்வதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து காவல் துறை உடனடியாக செய்ய வேண்டும்.
- கடந்த ஆண்டு போக்குவரத்து காவல் துறையால் பொதுமக்களுக்கு முன் எச்சரிக்கை செய்திகள் வழங்கப்பட்டது போன்று இவ்வாண்டும் வழங்கப்பட வேண்டும்.
- தரைப்பாலங்களில் வெள்ள நீர் செல்லும் நேர்வுகளில், மாற்றுப் பாதைக்கான ஏற்பாடுகளை செய்வதோடு, தரைப்பாலங்கள் மற்றும் ஆபத்தான நீர்நிலைகளில் பொதுமக்கள் சுயபடம் (selfie) எடுப்பதை கண்காணித்து காவல் துறையினர் தவிர்க்க வேண்டும்.
- சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து மழை நீர் வடிகால் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.
- குறுகலாக உள்ள ரயில்வே பாலங்களில் மழை நீர் தேங்க அதிக வாய்ப்புள்ளதால், மழைக் காலங்களில் இந்த பாலங்களில் மழை நீர் தேங்காவண்ணம், தூர்வாரும் பணி மேற்கொள்வதோடு, தேங்கும் மழை நீரை உடனடியாக அகற்ற தானியங்கி மோட்டார் பம்ப்புகள் அமைக்க வேண்டும்.
- நீர்நிலைகள் தொடர்ந்து தூர்வாரப்படுவதை உறுதி செய்வதோடு, ஆகாயத் தாமரை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற வேண்டும்.
- மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சென்னை, நாகப்பட்டினம், கடலூர் போன்ற புயலால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பலவீனமாக உள்ள பதாகைகளை கண்டறிந்து அவற்றை அகற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- பலவீனமாக உள்ள கட்டடங்களை கண்டறிந்து, பொதுமக்கள் பயன்பாடு தவிர்க்கப்பட்டு, பாதுகாப்பாக இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- தென்மேற்குப் பருவமழையின் காரணமாக அதிக மழைப் பொழிவு ஏற்படக்கூடிய மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அங்குள்ள அணைகளின் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
- தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தொடர்புடைய துறைகள் பேரிடர் மேலாண்மை திட்டத்தை தயாரித்து, அதன் அடிப்படையில், பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள உரிய அலுவலர்களை நியமித்து, தேவையான அனைத்து உபகரணங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருப்பதோடு, அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு துறை செயலாளர்கள், சம்மந்தப்பட்ட துறைத் தலைவர்கள், ராணுவம், விமானப்படை, கப்பற்படை, கடலோர காவல்படை, இந்திய வானிலை ஆய்வு மையம், ஒன்றிய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்புப்படை, உள்ளிட்ட ஒன்றிய அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
WRITE A COMMENT