Published : 09 Jun 2023 07:05 PM
Last Updated : 09 Jun 2023 07:05 PM
சென்னை: கிண்டியில் மெட்ரோ, மாநகர் பேருந்து, ரயில்வே ஆகிய அனைத்து போக்குவரத்து வசதிகளையும் இணைத்து ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில், 2-வது கட்ட மெட்ரோ பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டத்தில் கிண்டி மற்றம் வண்ணாரப்பேட்டையில் மல்டி மாடல் இன்டகிரேஷன் என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு அதிகாரிகள் கிண்டி பகுதியில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.
இதன்படி சென்னை பெருநகர் வளர்ச்சி குழு உறுப்பினர் செயலர் அன்சுல் மின்ரா, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும சிறப்பு அலுவலர் ஜெயக்குமார், சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர், தெற்கு ரயில்வே அதிகாரி ஆனந்த் ரூபனகுடி, எம்டிசி மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம், சென்னை மாநகராட்சி இணை ஆணையர் சமீரன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும சிறப்பு அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில், "கிண்டி ரயில் நிலையத்தில் தற்போது ஒரு நடை மேம்பாலம் கடப்பட்டு வருகிறது. மேலும், ரேஸ் கோர்ஸ் அருகில் ஒரு நடை மேம்பாலம் அமைக்க சென்னை மாநகராட்சியும், ஜிஎஸ்டி சாலையில் ஒரு நடை மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத் துறையும் முடிவு செய்துள்ளது. இந்த 3 நடைமேம்பாலங்களையும் இணைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஜிஎஸ்டி சாலையில் பல பேருந்துகள் சாலையில் ஓரத்தில் நின்று செல்கிறது. இதற்கு தீர்வு காண அந்த இடத்தில் ஒரு பேருந்து நிலையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், ரேஸ் கோர்ஸ் பகுதி மற்றும் ஜிஎஸ்டி சாலை நடைபாதை வளாகம் அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து சின்னமலை அருகில் ஒரு பேருந்து நிறுத்தம், கிண்டி தபால் நிலையம் அருகில் ஒரு பேருந்து நிறுத்தம், சின்னமலை அருகில் பேருந்து நிறுத்துவதற்கு தனி இடம், நடைபாதை அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT