Published : 09 Jun 2023 06:47 PM
Last Updated : 09 Jun 2023 06:47 PM

‘துணை முதல்வர் பதவி’ தகவலே தவறானது: உதயநிதி விளக்கம்

சென்னையில் நடந்த தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: துணை முதல்வர் பதவி குறித்த தகவலே தவறானது என்றும், அதுபோன்ற தகவல் எங்கிருந்து வந்தது என்பதும் தனக்கு தெரியாது என்றும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்வில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பணிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நேற்று இந்திய விளையாட்டு ஆணையத்தில் இருந்து அதிகாரிகள் வந்திருந்தனர். அடுத்த வாரத்தில், மீண்டும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் இருந்து நிறைய அதிகாரிகள் வரவுள்ளனர். இந்த வருகையின்போது, தமிழகத்தில் இருக்கக் கூடிய வசதிகளை எல்லாம் ஆய்வு செய்யவுள்ளனர். இதற்காக தமிழக அரசும் தயாராகிக் கொண்டு வருகிறது.

முதன்முறையாக தமிழகத்துக்கு இந்த வாய்ப்பை வழங்கிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குருக்கும், மத்திய அரசுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். சிறப்பாக இந்தப் போட்டிகளை நடத்திக் காட்டுவோம் என்று ஏற்கெனவே அவர்களிடம் கூறியிருக்கிறோம். எவ்வாறு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தினோமோ, அதேபோல ஆசிய ஹாக்கிப் போட்டிகளையும், கேலோ இந்தியா போட்டிகளையும் நடத்துவோம் என்று நம்புகிறேன்" என்றார்.

இந்த விழாவுக்கு பிரதமர் கலந்துகொள்வாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இதற்குமுன் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டிகளின் தொடக்க விழா அல்லது நிறைவு விழாக்களில் பிரதமர் கலந்துகொண்டுள்ளார். எனவே, நிச்சயம் அழைப்பு விடுக்கப்படும்" என்றார்.

கேலோ போட்டிகள் எங்கு நடத்தப்படவுள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “சென்னையில் மட்டும் நடத்துவதா அல்லது கோவை, மதுரை உள்ளிட்ட 3 அல்லது 4 இடங்களில் நடத்தலாமா என்பது குறித்து நேற்றுதான் முதல்கட்ட பேச்சுவார்த்தையே நடந்துள்ளது. அடுத்தடுத்தக் கூட்டங்களில் முடிவு செய்யப்படும்" என்றார்.

அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் பரவுவதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "யார் சொன்னது? எங்கிருந்து தகவல் பரவியது? எனக்கு வராத தகவல் உங்களுக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லையே. அப்படியொரு தகவலே தவறானது. அதுபோன்ற தகவல் எங்கிருந்து வந்தது என்று எனக்கு தெரியாது. நீங்கள் எதைவைத்து சொல்கிறீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x