Published : 09 Jun 2023 05:04 PM
Last Updated : 09 Jun 2023 05:04 PM
சென்னை: “அகில இந்திய விளையாட்டு போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், ''அகில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 6-ஆம் தேதி டெல்லியில் தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் இருந்து பள்ளிகள் சார்பில் ஒரு மாணவர் கூட பங்கேற்கவில்லை என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
போட்டிகளில் பங்கேற்க 247 மாணவர்களை அனுப்புமாறு லக்னோவில் இருந்து விளையாட்டு குழுமம் சார்பில் கடந்த மே மாதம் 11-ஆம் தேதி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள உடற்கல்வி முதன்மை ஆய்வாளருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, அதனை பள்ளிக் கல்வித் துறை கவனிக்காமல் அலட்சியப்படுத்தியதால் மாணவர்கள் போட்டியில் பங்கேற்க இயலவில்லை என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெறும் மாணவர்கள் உயர் கல்வியில் இடஒதுக்கீட்டிற்கு கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்கும் இது வழிவகுக்கும் என்று சொல்லப்படும் நிலையில், பள்ளிக் கல்வித் துறையின் அலட்சியத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போட்டிகளுக்கு மாணவர்களை அனுப்பக் கோரிய தகவலை உரிய முறையில் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் அலட்சியமாக இருந்தவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன், இனிவரும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு பள்ளி மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்'' என்று டிடிவி தினரகன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT