Published : 09 Jun 2023 04:17 PM
Last Updated : 09 Jun 2023 04:17 PM
சென்னை: "திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், மின் கட்டண உயர்வுக்கு காரணம் முந்தைய அதிமுக அரசும், மத்திய அரசும் என்று அரசு செய்திக் குறிப்பில் சூசகமாகத் தெரிவித்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு நாட்டினுடைய பொருளாதாரம் சரியான பாதையில் பயணிக்கும் வகையில், பொது நலன் பாதுகாக்கப்படுவதையும், சமூக நலன் முன்னிறுத்தப்படுவதையும், லாபத்தை லட்சியமாகக் கொள்ளாமல், மக்களுக்கான சேவை நியாயமான விலையில் கிடைக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு செயலாற்றுபவைதான் பொதுத் துறை நிறுவனங்கள். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழக மக்களுக்குத் தேவையான மின்சாரத்தைத் தங்கு தடையின்றி அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம். இந்த நோக்கத்தையே சிதைக்கும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது.
“மாதம் ஒருமுறை மின் பயன் அளவீடு”, “கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம்”, “விசைத் தறிக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம்” போன்ற பல வாக்குறுதிகளை தேர்தல் சமயத்தில் அள்ளி வீசிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை வாட்டி வதைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஒன்பது மாதங்களுக்கு முன்னர், வீடு, வணிகம், தொழிற்சாலை ஆகியவற்றிற்கான மின் கட்டணத்தை பன் மடங்கு உயர்த்தி மக்களை வாட்டி வதைத்த திமுகஅரசு, தற்போது வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை உயர்த்தி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றி இருக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், மின் கட்டண உயர்வுக்கு காரணம் முந்தைய அதிமுக அரசும், மத்திய அரசும் என்று அரசு செய்திக் குறிப்பில் சூசகமாகத் தெரிவித்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.
ஒன்பது மாதங்களுக்கு முன்பு மின் கட்டணத்தை பன் மடங்கு உயர்த்தியும், தரமான மின்சாரத்தை தங்கு தடையின்றி வழங்காத நிலையில், ஒடிசாவில் உள்ள சந்திரபிலா சுரங்கத்தில் இருந்து நிலக்கரி எடுத்துவரும் பணி காலதாமதமாவதன் காரணமாக ஆங்காங்கே மின்வெட்டு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், வணிகப் பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
வணிகப் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் உயர்த்தப்படுவதன் காரணமாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை உயரக்கூடும். இதன்மூலம் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படும். மின் கட்டண உயர்வு என்பது ஒரு சங்கிலிப்பிணைப்பினைப் போன்றது.
விஷம்போல் ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசி உயர்வினால் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்ற இந்தத் தருணத்தில், நாட்டின் பண வீக்கம் ஏறிக் கொண்டே இருக்கின்ற இந்தச் சமயத்தில், சொத்து வரி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, எரிவாயு விலை உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, என பலவற்றினால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியிருப்பது நியாயமற்ற செயல்.
“சொல்வதைச் செய்வோம்” என்று மக்களிடம் வாக்களித்துவிட்டு, சொல்லாததைச் செய்யும் அரசாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திராவிட மாடல் அரசு என்று சொல்லிக் கொண்டு மக்கள் விரோதச் செயல்களை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. திமுக அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
விலைவாசி உயர்வினைக் கருத்தில் கொண்டு, ஏழை, எளிய மக்களின் நலனையும், வணிக மற்றும் தொழில் அமைப்புகளின் நலனையும் காக்கும் வண்ணம், வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரை அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT