Published : 09 Jun 2023 04:05 PM
Last Updated : 09 Jun 2023 04:05 PM

இந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு | தமிழகத்துக்கு 6வது இடம்: ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கையில் தகவல்

கோப்புப் படம்

சென்னை: இந்தியாவில் அதிக நீரிழிவு நோய் பாதிப்பு உள்ள மாநிலங்களில் தமிழகம் 6 வது இடத்தில் உள்ளது ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு குறித்து மத்திய அரசின் ஐசிஎம்ஆர் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை INdia DIABetes [INDIAB] Study என்ற பெயரில் மிகப் பிரபலமான மருத்துவ இதழான 'தி லான்செட்' (The Lancet) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 20 வயதுக்கு மேற்பட்ட 1,13,043 நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 33,537 பேர் நகர்ப்புறத்தில் இருந்தும், 79,506 பேர் கிராமப்புறங்களில் இருந்தும் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆய்வின்படி, நீரிழிவு நோயைப் பொறுத்தவரையில் தேசிய அளவில் நோய் பரவல் 11.4 சதவீதமாக உள்ளது. இதில் அதிகபட்சமாக கோவா மாநிலத்தில் 26.4 சதவீதமும் குறைந்தபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 4.8 சதவீதமும் நோய் பரவல் உள்ளது. இதன்படி இந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. தேசிய அளவில் 15.3 சதவீதத்தினர் நீரிழிவு நோய் பாதிப்புக்கு முந்தைய நிலை நிலையில் இருப்பது (pre diabetes) ஆய்வில் தெரிய வந்த நிலையில். அதிகபட்சமாக சிக்கிம் மாநிலத்தில் 31.3 சதவீத பேரும், குறைந்தபட்சமாக மிசோரம் மாநிலத்தில் 6.8 சதவீத பேரும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு முந்தைய நிலையில் உள்ளனர்.

இதில் தமிழகத்தில் நீரிழிவு நோய்ப் பரவல் 14.4 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் நகர்ப்புறங்களில் நீரிழிவு நோய் பரவல் 10 சதவீதத்திற்கு அதிகமாகவும், கிராமபுறங்களில் 7.5 முதல் 9.9 சதவீதம் வரை உள்ளது. தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்புக்கு முந்தைய நிலையில் நோய்ப் பரவல் சதவீதம் 10 முதல் 14.9 வரை உள்ளது. நகர்ப்புறங்களில் இது 10 முதல் 14.9 வரையும், கிராமப்புறங்களில் இது 5 முதல் 9.9 சதவீதம் வரையும் உள்ளது.

இது குறித்து, டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் நிர்வாக இயக்குநரும், மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன் (MDRF) தலைவருமான டாக்டர். ஆர். எம். அஞ்சனா கூறுகையில், “இந்த விரிவான அறிக்கை, நாட்டில் தொற்றா நோய்கள் தொடர்பான சுகாதாரப் பராமரிப்புக் கொள்கைகளின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆய்வின் முடிவுகள் நாடு முழுவதும் பரவியுள்ள தொற்றா நோய்களின் நம்பகமான மற்றும் கணிசமான மதிப்பீடுகளை வழங்குவதால் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

முந்தைய மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் தொற்றா நோய்களின் பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நீரிழிவு நோயின் பரவல் வேகமும், பரவல் முறைகளும் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. சில மாநிலங்கள் ஏற்கனவே பாதிப்பு உச்ச கடட்த்தில் உள்ளது. மற்ற மாநிலங்கள் இப்போதுதான் பாதிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து தொற்றா நோய்களும் நகர்ப்புறங்களில் அதிகம் காணப்பட்டாலும், கிராமப்புறங்களில் முன்பு கண்டறியப்பட்டதைவிடக் கணிசமான அளவுக்கு அதிகப் பரவல் விகிதங்கள் இருப்பதாக ஆய்வு காட்டுகிறது” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x