Published : 09 Jun 2023 03:05 PM
Last Updated : 09 Jun 2023 03:05 PM

மேகேதாட்டு அணைக்கு எதிர்ப்பு தொடரும்: தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதி

திருச்சி: "கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசு மட்டுமல்ல, ஏற்கெனவே இருந்த அரசும் மேகேதாட்டுவில் அணை கட்டுவோம் என்றுதான் கூறி வந்தனர்.அப்போதும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டுதான் இருந்தோம். அதேநிலையில்தான் எங்களுடைய ஆட்சி இன்றைக்கும் உள்ளது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "காவிரி டெல்டா மாவட்டங்களில் இருக்கக்கூடிய சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்ட உடனே, அடுத்த நிமிடமே தமிழக அரசு அதை எதிர்த்துப் போராடியது. மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது. ஒருபோதும் இதை அனுமதிக்கமாட்டோம் என்று நானே அறிவித்தேன். இதன்மூலமாக மத்திய அரசு ஏல அறிவிக்கையை ரத்து செய்தது.

டெல்டாவின் உரிமைகளை விட்டுக்கொடுக்காத அரசாக திமுக அரசு தொடர்ந்து செயல்படும். அதேபோல், காவிரி டெல்டாவின் வேளாண் வளர்ச்சிக்கும், இந்தப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரவும் முன்னுரிமை அளித்து இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில், காவிரியில் உள்ள பாசன கால்வாய்களைத் தூர்வாரும் பொருட்டு கடந்த 2021-22ம் ஆண்டில், 62 கோடியே 91 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 3,859 கி.மீ தூரமுள்ள கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.

மேட்டூர் அணை பாசனத்துக்காக திறந்துவிடப்படக்கூடிய நாளான ஜூன் 12ம் தேதியன்று அணை திறக்கப்பட்டது. அதோடு வேளாண் பெருமக்களுக்கான பல்வேறு உதவிகள் எல்லாம் வழங்கப்பட்டது. இதன்விளைவாக காவிரி டெல்டா பகுதியில் வரலாற்று சிறப்பான சாதனையை நாம் எட்டினோம். 4 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியும், 13 லட்சத்து 341 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு, 39 லட்சத்து 73 ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு மிகப்பெரிய சாதனை படைக்கப்பட்டது.

அதை சாதனை என்று சொல்வதைவிட, வேளாண் புரட்சி என்று கூறலாம். அதன் தொடர்ச்சியாக 2022-23 வரவு செலவு திட்டத்தில், காவிரி பாசனப்பகுதியில் தூர்வாருவதற்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடைமடை பகுதிவரை தண்ணீர் செல்ல வசதியாக, தூர்வாரும் பணிகள் துரிதமாக நடந்தது. மேட்டூர் அணை முன்கூட்டியே மே 24 அன்றே திறக்கப்பட்டது. இருந்தாலும், தண்ணீர் வந்து சேருவதற்கு முன்பே 4,964 கி.மீ நீளமுள்ள கால்வாய்கள் அனைத்து தூர்வாரும் பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டன. உழவர்களுக்கான இடுபொருட்களும், கூட்டுறவு வங்கிக் கடன்களும் முழுமையாக கிடைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக 2021-22 சாதனையை முறியடிக்கும் வகையில், மற்றொரு வரலாற்று சாதனையாக 2022-23ம் ஆண்டில், 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியும், 13 லட்சத்து 53 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டது. இதனால், 41 லட்சத்து 47 ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது.

இந்த ஆண்டு இதேபோன்றதொரு திட்டமிடுதலை தமிழக அரசு செய்தது. நீர்வளத்துறை மூலமாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதற்காக 90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், 4,773 கி.மீ நீளமுள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 96 விழுக்காடு அளவு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகளும் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் முடிக்கப்படும்.

இதோடு வேளாண் பொறியியல் துறை சார்பாக ரூ.5 கோடி செலவில், 1,146 கி.மீ நீளமுள்ள கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 651 கி.மீ தூரமுள்ள தூர்வாரும் பணிகள் முடிந்துள்ளது. எஞ்சியுள்ள 45 விழுக்காடு தூர்வாரும் பணிகள் தொடர்ந்து விரைவாக நடைபெற்றது வருகிறது. சென்ற ஆண்டுகளில் நாம் சாதித்துக் காட்டியதைப் போலவே மேட்டூர் அணை நீர் காவிரி டெல்டா பகுதிகளுக்கு வருவதற்கு முன்னதாகவே, அனைத்து தூர்வாரும் பணிகளும் முடிக்கப்படும்" என்றார்

அப்போது முதல்வரிடம், மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசு மட்டுமல்ல, ஏற்கெனவே இருந்த அரசும் மேகேதாட்டுவில் அணை கட்டுவோம் என்றுதான் கூறி வந்தது.அப்போதும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டுதான் இருந்தோம். அதேநிலையில்தான் எங்களுடைய ஆட்சி இன்றைக்கும் உள்ளது. கருணாநிதி எப்படி அந்த விசயத்தில் உறுதியாக இருந்தாரோ, அதே உறுதியோடு இந்த ஆட்சி நிச்சயமாக இருக்கும். அதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x