Published : 09 Jun 2023 12:49 PM
Last Updated : 09 Jun 2023 12:49 PM
தற்போதுள்ள மதுவிலக்கு அமைச்சரால் தான் திமுகவின் வீழ்ச்சி இருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருவிடைமருதூரில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது,
"கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்றதும் நீர்ப் பாசனத் திட்டத்தை 5 ஆண்டுக்குள் நிறைவேற்ற ரூ. 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளனர். ஆனால் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி மேகேதாட்டுவில் அணை கட்ட விடமாட்டோம்.
இதே போல் தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி என 5 ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கினால், தமிழகத்தில் பல ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ள நீர் பாசனத்திட்டங்கள் நிறைவேற்ற முடியும்.
இதே போல் கொள்ளிடம் ஆற்றில் 11 தடுப்பணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். இது குறித்து முதல்வரிடமும் கோரிக்கை விடுத்தோம். ஆனால் தமிழக அரசு, தடுப்பணையை கட்டாமல் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், தனியாரும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, தமிழக அரசு மணல் குவாரிக்கு அனுமதி வழங்கியதைத் திரும்பப் பெற்று, அந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும்.
திமுக கடந்த தேர்தல் அறித்த பல வாக்குறுதியில் ஒன்றான பூரண மதுவிலக்கு அமல்படுத்தாது குறித்து தமிழக முதல்வர் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். மதுவிற்பனையில் தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு 1 ஆண்டுக்கு ரூ. 1600 கோடி மது விற்பனையானது, நிகழாண்டு ரூ. 50 ஆயிரம் கோடி விற்பனையாகியுள்ளது எனக் கூறப்படுகிறது. இதே போல் இன்னும் 3 ஆண்டுகளில் 3 மடங்காக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
தற்போதுள்ள மதுவிலக்கு அமைச்சரால் தான் திமுகவின் வீழ்ச்சி இருக்கு. எனவே தமிழக முதல்வர் அவரை உடனடியாக மாற்றி, சமூக அக்கறையுடையவரை நியமிக்க வேண்டும் எனத் தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.
இந்த மதுவால் இந்த தலைமுறையை காப்பாற்ற முடியாது, அடுத்த தலைமுறையையாவது காப்பாற்ற வேண்டும் என்று தான் போராடி வருகின்றேன். ஆனால் இங்கு ஆட்சியிலிருந்த 2 கட்சிகளும் மக்களை நாசமாக்கி விட்டார்கள்.
தற்போது குறுவை சாகுபடி தொடங்கியுள்ள நிலையில், வழக்கம் போல் தண்ணீர் திறக்கவேண்டும், அறுவடைக் காலங்களில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். அங்கு லஞ்ச வாங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இது போன்ற நிலை இருக்காது, அதனை ஒழித்து விடுவோம்.
மத்திய அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான விலையுடன் சேர்த்து தமிழக அரசு குவிண்டாலுக்கு ஒன்றிற்கு ரூ. 3 ஆயிரமாக வழங்க வேண்டும். தமிழகத்தில் தற்போது மின்கட்டணம் உயர்த்தவுள்ள நிலையில், அதனை ரத்து செய்யாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம்.
எனவே, அனைவரும் பாமகவிற்கு ஒரே ஒரு முறை வாய்ப்பு வழங்கினால், கல்வி,மருத்துவம், விவசாய இடுபொருட்கள் உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்குவோம், மதுவை ஒழிப்போம்" எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT