Published : 09 Jun 2023 04:15 AM
Last Updated : 09 Jun 2023 04:15 AM
திருநெல்வேலி: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் திருநெல்வேலி வழியாக 12 நாட்கள் மாதா வைஷ்ணவ தேவி தரிசன யாத்திரை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து அக்கழக பொதுமேலாளர் ரவிகுமார் திருநெல்வேலியில் கூறியதாவது: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் பாரத கவுரவ் சிறப்பு சுற்றுலா ரயில் வரும் 1-ம் தேதி கேரள மாநிலம் கொச்சுவேலியிலிருந்து புறப்படுகிறது. இந்த ரயில் நாகர்கோவில், திருநெல்வேலி வழியாக ஹைதராபாத் செல்கிறது. 3-ம் தேதி அதிகாலையில் ஹைதரா பாத் சர்மினார், கொல்கொண்டா, ராமானுஜர் சமத்துவ சிலை ஆகிய இடங்களுக்கு செல்லும்,
5-ம் தேதி ஆக்ரா தாஜ்மகால், மதுராவுக்கும், 6-ம் தேதி கத்ராவிலுள்ள ஷ்ரிமாதா வைஷ்ணவா தேவி கோயிலுக்கும் செல்லும், 8-ம் தேதி அமிர்தசரஸ் பொற்கோவில், 9-ம் தேதி டெல்லி குதுப்மினார், இந்தியா கேட், செங்கோட்டை, இந்திரா அருங்காட்சியகம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும். 10-ம் தேதி லோட்டஸ் கோயில் சென்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டு 12-ம் தேதி கொச்சுவேலி வந்தடையும். இந்த ரயிலில் மொத்தம் 700 பேர் பயணிக்கும் வகையில் 14 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் ஒருவருக்கு ரூ.22,350-ம், 3 ஏசி பெட்டிக்கு ரூ.40,380-ம் கட்டணமாக வசூலிக்கப்படும். மிக குறைந்த கட்டணத்தில் அதிக நாட்கள் பயணிக்கும் சுற்றுலா ரயில் தென்தமிழகத்தில் இப்போதுதான் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் இதுவரை 60 சதவிகிதம் இருக்கைகள் நிரம்பி விட்டன. இந்த வாய்ப்பை விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மதுரை, கோவை, திருச்சி, சென்னையிலுள்ள சுற்றுலா கழக மையங்களிலும், இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT