Published : 09 Jun 2023 04:13 PM
Last Updated : 09 Jun 2023 04:13 PM

முக்கடல் அணையை தூர் வாருவதில் தொடரும் அலட்சியம் - 5 அடிக்கு மண்டிக் கிடக்கும் சகதி

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையைதூர்வாருவதில் தொடர்ந்து அலட்சியம் காட்டுவதால் 5 அடிக்கு சகதி மண்டிக் கிடக்கிறது. இதனால் பருவ மழைக் காலங்களில் முழுகொள்ளளவுக்கு தண்ணீரை தேக்கிவைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகராக விளக்கும் நாகர்கோவில் மாநகரில் குடிநீர் ஆதாரமாக முக்கடல் அணை உள்ளது. 25 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து விநாடிக்கு 8 கனஅடியில் இருந்து 10 கனஅடி தண்ணீர் நாகர்கோவிலுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அப்படி இருந்தும் வாரம் ஒருமுறையே சுழற்சி முறையில் மக்களுக்கு குடிநீர் கிடைக்கிறது.

ஆண்டுதோறும் ஏப்ரல், மேமாதத்தில் முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் நிலைக்கு வரும்போது, குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியடை வதை போக்க பேச்சிப்பாறை அணையில் இருந்து முக்கடல் அணைக்கு தண்ணீர் திறந்து விட்டு அங்கிருந்து நாகர்கோவில் கிருஷ்ணன்கோயில் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வந்து விநியோகம் செய்யப்படுகிறது.

5 அடிக்கு சகதி நிரம்பியது: குடிநீர் தட்டுப்பாடை நிரந்தரமாக போக்கும் வகையில் தொடங்கப்பட்ட புத்தன்அணை திட்டத்தில் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து சோதனைஓட்டம் நடந்து வருகிறது. இது ஒருபுறமிருக்க முக்கடல் அணையின் நீர்பிடிப்பு தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அணையை தூர்வாரி20 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால்5 அடி வரை சகதி நிரம்பியுள்ளது.

புத்தன் அணை திட்டம் நடைமுறைக்கு வந்தாலும், முழு குடிநீர்தேவையை முக்கடல் அணை நீர் மூலம் பூர்த்தி செய்ய இயலும். ஆனால் புத்தன் அணையை தூர்வாராமல் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவது பொதுமக்களை கவலையடைய செய்துள்ளது. திரு விதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னரான பத்மநாபதாச உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவால் நாகர்கோவில் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும்வகையில் கட்டப்பட்டு 1945-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி முக்கடல் அணை திறக்கப்பட்டது.

அப்போது இந்த அணை கட்டுவதற்கு ஆன மொத்த செலவு ரூ.20 லட்சத்து 53 ஆயிரம் ஆகும். 25 அடி ஆழம் கொண்ட அணையின் நீர்பிடிப்பு பகுதி 17.48 சதுர கிமீ. அணையின் நீளம் 1,080 அடி, உயரம் 52 அடி. அடிமட்ட அகலம் 314 அடி. இந்த அணை கட்டபட்டபோது நாகர்கோவில் நகரின் மக்கள் தொகை 51 ஆயிரத்து 603 பேர் மட்டுமே.

கடந்த 1,979 மற்றும் 2,000 ஆண்டில் அபிவிருத்தி பணி மேற்கொண்ட போதும் தற்போதுள்ள 4 லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, முக்கடல் அணையை தாமதமின்றி தூர்வாரி முழு கொள்ளளவுக்கு நீரை தேக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்வழிப் பாதையில் தடை: இதுகுறித்து சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் கூறும்போது, ‘‘முக்கடல் அணைக்கு நச்சுக்கால் ஓடை ,எருமைப்பட்டி, இஞ்சிக்கடவு, பிரந்தனேரி ஓடை, ஏணியேந்தல், குளத்துவிளை ஓடை மூலமாக நீர் வருகிறது. இங்கிருந்து வரும் மணல் அணையில் தேங்குவதால் நீர்வழிப் பாதை தடைபட்டு அணைக்கு நீர்வரத்து குறையும் நிலை உள்ளது.

இதனால் நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர் தேவையை அணையால் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யும் அவலம் உள்ளது. அணையை தூர்வாரினால் கூடுதலாக நீரை தேக்க முடியும். இதனால் சீராக மக்களுக்கு குடிநீர் விநியோகிக்க இயலும். இதுகுறித்து குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இந்த ஆண்டாவது முக்கடல் அணையை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x