Published : 25 Oct 2017 08:18 AM
Last Updated : 25 Oct 2017 08:18 AM
கந்துவட்டி வசூலித்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
கந்துவட்டி கொடுமையால் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கிமுத்து என்பவர் மனைவி, 2 மகள்களுடன் தீக்குளித்தார். இதில், தாயும் குழந்தைகளும் இறந்தனர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து கந்துவட்டியை தடுக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். கந்துவட்டி புகார்களை பெற்று நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் தனிப்பிரிவு உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 044 - 23452380 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என கந்துவட்டி தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், தொடர்ந்து கந்துவட்டி வசூல் செய்தால் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கவும் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் கடந்த ஆண்டு கந்துவட்டி தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 8 பேர் கைது செய்யப்பட்டு 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆண்டு 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், பிரபல சினிமா பைனான்சியர் போத்ரா, அவரது மகன்கள் உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கந்துவட்டி குறித்து ஆணையர் அலுவலகத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘தமிழகத்தில் கந்துவட்டி வசூல் தடைச் சட்டம் 2003-ல் கொண்டு வரப்பட்டது. இதில் கடன் கொடுத்தவர்கள் குறிப்பிட்ட சதவீதத்துக்கு மேல் வட்டி வசூல் செய்யக்கூடாது என்பது போன்ற அம்சங்கள் உள்ளன. அடியாட்கள் மூலம் கடன் வசூலிக்கக் கூடாது. கறாரான நடவடிக்கையால் அப்பாவிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். கந்து வட்டி வசூலிப்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் வரை வசூலிக்க சட்டத்தில் இடம் உள்ளது. தொடர்ந்து கந்துவட்டி புகாருக்கு ஆளாகிறவர்கள் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT