Published : 08 Jun 2023 05:09 AM
Last Updated : 08 Jun 2023 05:09 AM
சென்னை: தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் சந்தித்து ஊக்கத்தொகை வழங்க உள்ளார். சென்னை நீலாங்கரையில் இந்த நிகழ்ச்சி வரும் 17-ம் தேதி நடக்க உள்ளது.
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது.
பனையூரில் உள்ள அலுவலகத்தில் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்திக்கும் விஜய், இயக்கத்தை விரிவுபடுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரது அறிவுறுத்தலின்படி, அம்பேத்கர் பிறந்தநாளன்று அவரது சிலைக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இப்தார் நிகழ்ச்சிகளை நடத்தினர். கடந்த மாதம் 28-ம் தேதி உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர்.
இந்நிலையில், வரும் 17-ம் தேதி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை விஜய் சந்திக்க இருக்கிறார்.
இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் ஜூன் 17-ம் தேதி மாணவ, மாணவிகளுக்கு, சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி விஜய் கவுரவப்படுத்த உள்ளார் என்றார்.
நடிகர் விஜய், முதல்முறையாக, மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோரை சந்திக்க உள்ளார். 2026-ல் நடக்க உள்ள தமிழகசட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு முன்பு தீவிர அரசியலுக்கு வர விஜய் திட்டமிட்டுள்ளார். அதற்கான அச்சாரமே இது என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்க வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT