Published : 08 Jun 2023 04:52 AM
Last Updated : 08 Jun 2023 04:52 AM
சென்னை: இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மின்னணு இயந்திரங்கள் இருப்பு, தேவை குறித்த ஆய்வு நடந்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2019-ல் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று அமைந்த மத்திய பாஜக அரசின் பதவிக் காலம் வரும் 2024 மே மாதம் முடிகிறது. இதனால், 2024 ஏப்ரலில் பொதுத் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில், மக்களவை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தற்போதே தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக, மின்னணு இயந்திரங்களை சரிபார்த்தல், தேவையான அளவுக்கு மாநிலங்களில் அவற்றை இருப்பு வைத்தல் ஆகிய பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது: நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. முதல்கட்டமாக, மாநிலங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு ஏற்ப மின்னணு இயந்திரங்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, வேறு சிலமாநிலங்களிலும், சமீபத்தில் கர்நாடகாவிலும் சட்டப்பேரவை பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த தேர்தல்களின்போது, அண்டை மாநிலங்களில் பற்றாக்குறை ஏற்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்களித்ததை அறியும் விவிபேட் இயந்திரங்கள் தேவைக்கேற்ப அனுப்பப்பட்டன.
தற்போது மக்களவை பொதுத் தேர்தலுக்கு தமிழகமும் தயாராக வேண்டிய நிலையில், மாவட்டம்தோறும் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு ஏற்ப தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்களை மதிப்பிட்டு, அவற்றின் நிலையை ஆய்வு செய்யும் பணி சமீபத்தில் தொடங்கி, நடைபெற்று வருகிறது.
கூடுதலாக 35 சதவீத இயந்திரங்கள்: ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவைப்படும் மின்னணு இயந்திரங்களின் அளவைவிட கூடுதலாக 35 சதவீதம் இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், மாவட்டங்களுக்கு 135 சதவீதம் அடிப்படையில், அதாவது 200 வாக்குச்சாவடிகள் இருந்தால் 270 இயந்திரங்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இயந்திரங்கள் இருப்பு தொடர்பான ஆய்வுக்கு பிறகு, மின்னணு இயந்திரங்களின் முதல்நிலை சோதனை வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும். வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னணு இயந்திரங்கள் மற்றும் இங்கு உள்ள இயந்திரங்கள் ஆகியவற்றில் உள்ள பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு, அவை இயங்கும் நிலையில் வைக்கப்படும்.
இதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ‘இயந்திரம் நல்ல நிலையில் உள்ளது. தரவுகள் ஏதும் இல்லை’ என்பதை காண்பித்து உறுதி செய்யப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்படும். இதையடுத்து, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதும் அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்படும்.
தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் துறை அதிகாரிகள், ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நானும் சென்று ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்து வருகிறேன். இயந்திரங்களின் தேவை, மாவட்டவாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இருப்பு உள்ளிட்டவை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், தேர்தல்நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசித்து வருகிறேன். கள்ளக்குறிச்சி, கோவை,நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சமீபத்தில் ஆய்வு செய்துள்ளேன். மற்ற மாவட்டங்களிலும் விரைவில் ஆய்வு செய்ய உள்ளேன்.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், ஏற்கெனவே இருந்த 32 மாவட்டங்களில் தேர்தல் துறைக்கு சொந்தமான கிடங்குகள் உள்ளன. இங்குதான் மின்னணு இயந்திரங்கள் உள்ளிட்ட தேர்தல் தளவாட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் கிடங்குகள் இதுவரை கட்டப்படவில்லை. இந்த கிடங்குகளை கட்ட இடம், கட்டிடம் தொடர்பான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 6 புதிய மாவட்டங்களிலும் இப்போதைக்கு அரசின் கிடங்குகளை வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வருகிறோம். விரைவில் புதிய கிடங்குகள் கட்டப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆணைய குழுவினர் வருகை: மின்னணு இயந்திரங்களின் முதல்நிலை சோதனை வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பணிகள் முழு வீச்சில் தொடங்கும் என்று தெரிகிறது. பின்னர், முதல் கட்டமாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தொடங்குகிறது. அக்டோபர் இறுதியில் தேர்தல் ஆணையகுழுவினர் தமிழகம் வருவார்கள் என்று கூறப்படுகிறது.
டெல்லியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் கடந்த மே 28-ம் தேதி திறக்கப்பட்டது. புதிய நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மக்களவை அரங்கில் 888 இருக்கைகள் உள்ளன.
ஆனால், அடுத்த ஆண்டு நடக்க உள்ளமக்களவை தேர்தலில் எம்.பி.க்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. மக்கள்தொகை கணக்கின் அடிப்படையில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கொண்ட குழு அமைத்து, மக்களிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் எம்.பி.க்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதுதான் நடைமுறை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT