Published : 30 Oct 2017 10:23 AM
Last Updated : 30 Oct 2017 10:23 AM
அண்ணா நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அருகில் உள்ள மின்மயானத்தின் புகைப்போக்கி, கடந்த ஆண்டு வீசிய வார்தா புயலில் சேதமடைந்தது. அது சரிசெய்யப்படாத நிலையில் மின்மயானத்தில் உடல்களை எரிக்கும்போது வெளியேறும் புகை, குடியிருப்பு பகுதிகளில் பரவுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் மொத்தம் 38 மின் மயானங்கள் உள்ளன. இதில் அண்ணா நகர் நியூ ஆவடி சாலையில் உள்ள மயானத்தை சுற்றி நிறைய குடியிருப்புகள் உள்ளன. அண்ணா நகர் கிழக்கு மற்றும் மேற்கு, அயனாவரம், ஐசிஎப் காலனி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இருப்பதால், இங்கு அடுக்குமாடி குடியிருப்பு அதிகமாக உள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வீசிய வார்தா புயலால் இங்குள்ள மின்மயானத்தின் புகைபோக்கி உடைந்து சேதமடைந்தது. அது இன்னும் சரிசெய்யப்படவில்லை. இதனால் இங்கு உடல்களை எரிக்கும்போது வெளியேறும் துர்நாற்றமான புகை அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் பரவுவதால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். .
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சிலர் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘வார்தா புயலால் இங்குள்ள மின்மயானத்தின் புகைப்போக்கி சேதமடைந்தது. இங்கு தினமும் சுமார் 5 அல்லது 6 உடல்கள் எரிக்கப்படுகின்றன. அவற்றை எரிக்கும்போதெல்லாம் இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் கரும்புகை சூழ்ந்து விடுகிறது. சில நேரங்களில் வயதானவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. சுகாதார கேடு ஏற்படுவதோடு, நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இது தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’என்றனர்.
இதுபற்றி அண்ணா நகர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறும்போது, ‘‘இங்குள்ள மின்மயானம் பள்ளமான இடத்தில் இருக்கிறது. எனவே, இந்த மின்மயானத்தின் புகைபோக்கியை உயரமாக அமைக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தோம். இதற்கிடையே, கடந்த ஆண்டு வீசிய வார்தா புயலின்போது புகைப்போக்கி உடைந்து சேதமானது. மின்மயானத்தில் உடல்களை எரிக்கும்போது வெளியேறும் கரும்புகை அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தையும் சூழ்ந்து விடுகிறது. இதனால், இங்கு வரும் மக்களும், நாங்களும் புகை துர்நாற்றத்தால் அவதிப்படுகிறோம். மாநகராட்சி அதிகாரிகளிடம் இது தொடர்பாக புகார் அளித்தோம். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனாலும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் விரைவாக நடவடிக்கை எடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT