Last Updated : 08 Jun, 2023 06:50 AM

 

Published : 08 Jun 2023 06:50 AM
Last Updated : 08 Jun 2023 06:50 AM

முதலில் தேவை ‘நீட் சிட்டி’ அப்புறம் தான் ‘ஸ்மார்ட் சிட்டி’ - சிறுநீர் கழிப்பிடங்களாக மாறிய கோவை சாலையோரங்கள்

கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே , சிறைச்சாலை சுவர் ஓரம் கழிப்பிடமாக மாறியபகுதி. படங்கள்: இல.ராஜகோபால்

கோவை: கோவை மாநகரில் மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் சாலையோரத்தில் பலர் சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. முக்கிய பேருந்து நிலையங்களுக்கு அருகே கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தர மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் காந்திபுரத்தில் தேவையான அளவு கழிப்பிடங்கள் இல்லை. ஹோப்காலேஜ், லட்சுமி மில்ஸ், பீளமேடு உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்களிலும் இதே நிலைதான் உள்ளது.

இதன் காரணமாக பலர் பகல் மற்றும் இரவு நேரங்களில் பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள சாலையோரங்களில் சிறுநீர் கழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் பேருந்து நிலைய சுற்றுப்புற பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது.

காந்திபுரம் மத்திய மற்றும் நகர பேருந்து நிலையம் அருகே கழிப்பிட வசதி இருந்தபோதும் மத்திய சிறையின் எல்லைச்சுவர் அமைந்துள்ள பகுதி மற்றும் பாரதியார் சாலை சுவரோரங்கள் சிறுநீர் கழிப்பிடமாக காட்சியளிக்கின்றன. நஞ்சப்பா சாலையோரம் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்ட இடங்களின் பின்புறம் மற்றும் மத்திய சிறைச்சாலை முதல் எல்ஐசி அலுவலக சிக்னல் வரை சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கனரக வாகனங்களின் பின்புறம் சிறுநீர் கழிப்பிடமாக மாறியுள்ளன.

மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களை கண்டறிந்து கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையோரம் நிறுத்தப்டும் வாகனங்களின் மறைவிடங்களை சிலர் கழிப்பிடமாக
பயன்படுத்துவதால் சுகாதாரமற்று காணப்படும் கோவைநேரு ஸ்டேடியப் பகுதி

ஹோப்காலேஜ் பகுதியில் பேக்கரி கடை நடத்தி வரும் முருகேஷ் கூறும்போது, “நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக உள்ளது ஹோப்காலேஜ். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள்இருபுறங்களிலும் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். கழிப்பிட வசதி இல்லாத காரணத்தால் காலை முதல் இரவு வரை சாலையோரங்களில் சிறுநீர் கழித்து செல்கின்றனர். இதனால் சுற்றுப்புற பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

பொது கழிப்பிட வசதி இல்லாததால் பெண்கள் மற்றும் முதியவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மக்கள் நலன் கருதி கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

‘சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயமுத்தூர்’ தலைவர் ஜெயராமன் கூறும்போது, “மாநகரில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் மிகவும் வரவேற்கத்தக்கது. இருப்பினும் முதலில் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொது கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தர மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள காந்திபுரம், ரயில்நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் கழிப்பிட வசதி இல்லை. போதுமான அளவு கழிவறை வசதியை ஏற்படுத்தி தர வேண்டியது அவசியம். முதலில் தேவை சுகாதாரமான நகரம். பின்பு தான் ஸ்மார்ட் சிட்டி” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x