Published : 06 Oct 2017 06:23 PM
Last Updated : 06 Oct 2017 06:23 PM
பாம்பன் மீனவர் வலையில் வெள்ளிக்கிழமை ஆழ்கடலில் வசிக்கக்கூடிய அரிய வகை மின்சார திருக்கை மீன் சிக்கியது.
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதியில் யானைத் திருக்கை, பூவாளித் திருக்கை, கொம்புத் திருக்கை, குருவித் திருக்கை, வல்வடித் திருக்கை, கொட்டுவா திருக்கை, சுருள் திருக்கை, புள்ளியன் திருக்கை, கள்ளத் திருக்கை, சோனகத் திருக்கை, கருவால் திருக்கை, ஓட்டைத் திருக்கை, கோட்டான் திருக்கை, பஞ்சாடு திருக்கை, மட்டத் திருக்கை, சப்பைத் திருக்கை, செப்பத் திருக்கை, நெய்த் திருக்கை, சீமான் திருக்கை, ஆடாத் திருக்கை, உள்ளான் திருக்கை, ஊழித் திருக்கை, பூவாலித் திருக்கை, செம்மூக்கன் திருக்கை, கூண்டத் திருக்கை, சமன் திருக்கை, தடங்கான் திருக்கை, பாஞ்சாலன் திருக்கை, வண்ணாத்தித் திருக்கை, கொப்புத் திருக்கை, சங்கோசான் திருக்கை, கட்டுத் திருக்கை, கண்ணாமுழித் திருக்கை, மின்சார திருக்கை என பலவகைகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் பாம்பன் தென் கடல் பகுதியில் கடலுக்குச் சென்ற மீனவர்களின் வலையில் பல வகை மீன்களுடன் ஆழ்கடலில் வசிக்கக்கூடிய அரிய வகை மின்சார திருக்கை மீன் ஒன்றும் வெள்ளிக்கிழமை சிக்கியது.
மின்சார திருக்கை (electric ray) மீன்களுக்கு மற்ற திருக்கை மீன்களைப்போல நச்சு ஊசி போன்ற உறுப்பு கிடையாது. ஆனால் மின்சார அதிர்ச்சியைக் கொடுக்கக்கூடிய செல்களைக் கொண்டது. மின்சார திருக்கைகள் 8 முதல் 220 வோல்ட் வரையிலும் மின் அதிர்ச்சியை தரக்கூடியது.
திருக்கைகள் வாலாலும் உடலாலும் நீந்தும் என்றால், மின்சாரத் திருக்கைகள் வாலால் மட்டுமே நீந்தக்கூடியவை. இவை மெதுவாகவே நீந்தக்கூடியவை. ஒரு அடியிலிருந்து ஆறு அடி நீளம் வரை வளரக் கூடியவை.
பாம்பன் மீனவர்களின் வலையில் சிக்கியது மார்பில்ட் மின்சார திருக்கை ஆகும். மார்பில் கற்களை போன்ற தோற்றத்தில் இது இருப்பதால் ஆங்கிலத்தில் இத்தகைய பெயர் இதற்கு உண்டானது. இந்த மார்பில்ட் மின்சார திருக்கையின் தலையில் இரு பக்கங்களிலும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான உறுப்புகள் உள்ளன. இவற்றிலிருந்து சுமார் 70 வோல்ட் முதல் 80 வோல்ட் வரையிலும்கூட மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இரைகளைப் பிடிக்கவும் பெரிய உயிரினங்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்கவும் இதற்கு இந்த மின்சாரமே பலமுள்ள ஆயுதமாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT