Published : 14 Oct 2017 09:23 AM
Last Updated : 14 Oct 2017 09:23 AM
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய - இலங்கை அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண டெல்லியில் கடந்த ஆண்டு நவ.2-ம் தேதி இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையும், அதைத்தொடர்ந்து நவ.5-ம் தேதி இந்திய - இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் அளவிலான உயர்நிலைக் கூட்டமும் நடைபெற்றது. அதில், இரு நாடுகளுக்கு இடையிலான மீன்வளம் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி பேசி முடிவு எடுக்க கூட்டு செயல்திட்ட குழு கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறையும், இரு நாடுகளின் மீன்வளத்துறை அமைச்சர்கள் கூட்டத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறையும் கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், கடந்த ஏப்ரல் 7-ம் தேதி இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்கள், மீன்வளத்துறை, கடற்படை, கடலோர காவல்படை பிரதிநிதிகள் பங்கேற்ற இரண்டாவது பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெற்றது.
இந்நிலையில், அமைச்சர்கள் இடையேயான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (அக்.14) டெல்லியில் நடைபெறுகிறது. இதில், மத்திய வேளாண்மை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் ராதா மோகன், இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர ஆகியோர் தலைமையில் இரு நாடுகளின் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது, மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்தல், மீனவர்களின் படகுகளில் ஜிபிஎஸ் கருவி, தகவல் தொடர்பு கருவிகளை பொருத்துவதற்கான சாத்தியக்கூறுகள், மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள இரு நாடுகளின் கடலோர காவல்படையினர் இடையே ஹாட் லைன் தொலைபேசி வசதி குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT