Published : 08 Jun 2023 06:23 AM
Last Updated : 08 Jun 2023 06:23 AM
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டாபிராம் வழியாக சென்னை-திருத்தணி நெடுஞ்சாலையின் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதை வழியாக சென்னையில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
எனவே, இந்த நெடுஞ்சாலையில் ‘எல்சி-2’ என்ற ரயில் கடவுப் பாதை (ரயில்வே கேட்) அமைக்கப்பட்டு உள்ளது. தொடர் ரயில் போக்குவரத்து காரணமாக, சுமார் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை இந்த கடவுப் பாதை மூடப்படுகிறது.
இதனால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. அலுவலகம், வேலைக்குச் செல்வோர் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களும் குறித்த நேரத்துக்கு பள்ளிக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக, கடந்த 2010-11-ம்நிதியாண்டில், ரூ.33 கோடி செலவில் நான்கு வழிச்சாலை ரயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரயில்வே துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கிடையே, சென்னை- திருத்தணி நெடுஞ்சாலை 6 வழிச் சாலையாக மாற்றி அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து, ரயில்வே துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை திட்டத்தை மறுமதிப்பீடு செய்தது. இதன்படி, திட்ட மதிப்பீடு ரூ.52.11 கோடியாக உயர்ந்தது. திருத்திய மதிப்பீட்டின்படி கடந்த 2018-ம்ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. தொடங்கப்பட்ட 24 மாதங்களுக்குள் பணிகள் முடிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இதன்படி, சென்னையில் இருந்து அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம் வழியாக திருவள்ளூர், திருத்தணி, திருப்பதிக்கு இயக்கப்படும் வாகனங்கள் தற்போது மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. பட்டாபிராம் காவல் நிலையம் அருகே தண்டுரை, அன்னம்பேடு வழியாக மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக சென்று அங்கிருந்து நெமிலிச்சேரி ரவுண்டானாவை கடந்து சென்னை- திருத்தணி நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும். இதனால், வாகனங்கள் சுமார் 6 முதல் 9 கிமீ தூரம் வரை மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வாகனங்கள் சுற்றிச் செல்வதால் எரிபொருள் விரயம் ஆவதோடு, பயண நேரமும் அதிகரிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக இப்பணி மிகவும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, பட்டாபிராம் பாபு நகரை சேர்ந்த பி.செல்வம் என்பவர் கூறும்போது, மேம்பாலம் கட்டுவதற்கான பணியில் குறைந்த அளவுஊழியர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், பணிகள் விரைவாக நடைபெறவில்லை. எங்கள் பகுதியில்வசிக்கும் மக்கள் பொருட்களை வாங்கவும், மருத்துவமனைக்குச் செல்லவும் இந்தக் கடவுப் பாதையைக் கடந்து தான் பட்டாபிராம் செல்ல வேண்டி உள்ளது. ஒவ்வொரு முறையும் சுற்றிசெல்ல வேண்டி உள்ளது.
அடுத்து மழைக் காலம் தொடங்கினால் கட்டுமானபணிகள் பாதிக்கப்படுவதோடு, பாலத்தின் அணுகுசாலை வழியாகவும் செல்லமுடியாத நிலை ஏற்படும். எனவே அதற்கு முன்பாக பணிகளை முடிக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் தலைவர் டி.சடகோபன் கூறியதாவது: பட்டாபிராமில் மேம்பாலம் கட்ட போதிய நிலங்களை கையப்படுத்திய பிறகு தொடங்குவதற்குப் பதிலாக, பணிகள் தொடங்கிய பிறகு நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால், பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள அணுகுசாலையும் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. மழையின்போது சேறும், சகதியுமாக மாறி இருசக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
மேலும், இந்தப் பாலம் அருகே இருக்கும்பட்டாபிராம் காவல் நிலையம் எதிரே ரவுண்டானா அமைக்க வேண்டும். அப்போதுதான், தண்டுரையில் இருந்து ஆவடி செல்லும் வாகன ஓட்டிகளும், பட்டாபிராமில் இருந்து வடக்கு பஜார் செல்லும் வாகன ஓட்டிகளும் எளிதாக செல்ல முடியும்.
மேலும், பட்டாபிராமில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (ஐ.டி.பார்க்) அமைக்கும் பணிநிறைவடையும் தருவாயில் உள்ளது. தகவல் தொழில்நுட்பப் பூங்கா திறக்கப்பட்டால் இப்பகுதியில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர் வந்து பணிகளை பார்வையிட்டால் கட்டுமான பணிகள் வேகம் பெறும். இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறைஅதிகாரிகளிடம் கேட்டபோது, பட்டாபிராம் மேம்பால பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேலையில், திடீரென கரோனா தொற்று பரவியதால் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும், பாலத்தின் பக்கவாட்டு அணுகுசாலை, நடைமேடை ஆகியவை அமைப்பதற்கான இடங்களை கையகப்படுத்துவதிலும் தாமதம் ஏற்பட்டது. தற்போது இப்பிரச்சினைகளை எல்லாம் முடிந்து பணிகள் வேகம் பெற்றுள்ளன. எனவே, இந்தஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT