Published : 11 Oct 2017 11:11 AM
Last Updated : 11 Oct 2017 11:11 AM

பெண்கள் மனங்கவரும் சிறுமுகை மென்பட்டு கைத்தறிச் சேலைகள்: தீபாவளி விற்பனை இலக்கு ரூ.100 கோடி

மரக்கூழ் அட்டை, அதிலிருந்து செயற்கை பட்டு நூல் என தயாரித்து குஜராத் மாநிலத்துக்கு அனுப்பி வந்த ஆலை சிறுமுகை விஸ்கோஸ். சுற்றுச்சூழல் மற்றும் உற்பத்தி நஷ்டம் காரணமாகமூடப்பட்டு அதன்அடையாளமே இல்லாமல் ஆன பிறகும், அதன் நீட்சியாய் இந்த சிறு கிராமம் மென்பட்டு சேலை தயாரிப்புக்கு முன்னோடியாக மாற ஆரம்பித்துள்ளது.

மேட்டுப்பாளையத்திலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் தற்போது திரும்பிய பக்கமெல்லாம் கைத்தறி சப்தமும், அதையொட்டி பளீரிடும் வண்ண, வண்ண பட்டுச் சேலைகளே மிளிர்ந்து கொண்டிருக்கின்றன. இங்கு சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் கைத்தறி தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இங்கு தயாராகும் மென்பட்டு சேலை ரகங்கள், தரம் மற்றும் வேலைப்பாடுகள் காரணமாக நாடு முழுவதும் வர்த்தகர்கள் மத்தியில் அறிமுகமாகி நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

1.64 லட்சம் வண்ணங்கள்

இங்கு தயாராகும் கைத்தறி மென்பட்டு, கோரா காட்டன், மற்றும் காட்டன் சேலைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. பட்டுச் சேலைகளில் போடப்படும் மிக சிறந்த கலைநயம்மிக்க டிசைன்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருதினை 5 முறையும் 1 லட்சத்து 64 ஆயிரம் வண்ணங்களில் நெய்யப்பட்ட பட்டுச் சேலைக்கு மாநில அரசு விருதினையும், சிறுமுகை பகுதி கைத்தறி நெசவாளர்கள் வென்றுள்ளனர் என்பதே இவர்களின் கலைச்சிறப்புக்குச் சான்று.

சில ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் சிறுமுகையிலேயே கைத்தறியில் ‘சாப்ட் சில்க்’ எனப்படும் மென்பட்டுச் சேலைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்றைய இளம் பெண்கள் இந்த சேலைகளையே விரும்பி வாங்குகின்றனர்.

திருமண பட்டுப்புடவைகளில் மணமகன் மற்றும் மணமகளின் உருவங்களை தத்ரூபமாக இவர்கள் நெய்தும் தருகின்றனர். இதனால், ஆண்டுதோறும் இதன் விற்பனை பல மடங்கு அதிகரித்து வருகிறது. சிறுமுகையில் உள்ள 17 கைத்தறி நெசவு கூட்டுறவு உற்பத்தி சங்கங்கள் மூலம் மட்டும் கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு ரூ 60 கோடிக்கும் மேல் மென்பட்டு சேலை ரகங்கள் வர்த்தகம் ஆகியுள்ளன. அதை முன் வைத்து இந்த ஆண்டு ரூ.100 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உற்பத்தியும் விற்பனையும் தீவிரமாகியுள்ளது.

இங்குள்ள ஒவ்வொரு கைத்தறி கூட்டுறவுச் சங்கமும் ஐந்து முதல் எட்டு கோடிக்கு வர்த்தக இலக்கு நிர்ணயித்துள்ளதால், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை விற்பனை நூறு கோடியை எட்டும் என்கின்றனர் கூட்டுறவுச் சங்கத்தினர்.

சிறுமுகை நெசவாளர்களால் தயாரிக்கப்படும் பட்டு ரகங்களை ஐம்பது சதவீதத்துக்கு மேல் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. இங்கு ரசாயன கலப்பின்றி, மூலிகை சாற்றின் வண்ணங்களை மட்டுமே பயன்படுத்தி தயாராகும் மூலிகை பட்டுச் சேலைகளும் தயாரிக்கப்பட்டு, சற்றே கூடுதல் விலைக்கு தரப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x