Published : 08 Jun 2023 12:30 AM
Last Updated : 08 Jun 2023 12:30 AM
சென்னை: திமுக தலைவராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, அவரது பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி தொடங்கியது. இதற்காக அரசு சார்பிலும் திமுக தரப்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக துக்கம் அனுசரிக்கப்பட்டதால், ஒரு சில நிகழ்வுகள் தவிர மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், புதன்கிழமை மாலை நடைபெற்றது. பின்னி மில் வளாகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த கி.வீரமணி,கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், கே.எம்.காதர்மொய்தீன், திருமாவளவன், எம்.எச்.ஜவாஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன், தி.வேல்முருகன் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் அவர் கொண்டுவந்த பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்டு பேசினார். மேலும், "தமிழகத்தில் கருணாநிதி செய்த சாதனைகள் என்ன? திராவிட இயக்கம், திராவிட மாடல் தமிழகத்தில் செய்த சாதனைகள் என்ன? என்று கேட்பவருக்கு இதோ ஒரே ஒரு பகுதியைக் கூறியிருக்கிறேன். தமிழகத்தில் இருக்கக்கூடிய பிற்படுத்தப்படட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஏழை எளிய, பின்தங்கிய இஸ்லாமிய கிறிஸ்தவ, இங்கு வாழும் 7 கோடி மக்களுக்கும் மகத்தான திட்டங்களைத் தந்தவர் கருணாநிதி" என்று அவர் பேசினார்.
கொங்கு நாட்டு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன்: "இன்றைக்கு எவ்வளவு தொல்லைகள். 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படப்போவதாக பத்திரிகைகளில் செய்தி பரப்பப்படுகிறது. சிசிடிவி கேமிராக்கள் செயல்படவில்லை என்றால், மாநில அமைச்சரை அழைத்துச் சொல்லக்கூடாதா? எந்த கல்லூரியை மூடுவீர்கள்? அதேபோல், உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியேற்பு விழா. ஒரு 2 நாட்கள் காத்திருக்ககூடாதா? முதல்வர் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கமாட்டாரா? பதவியேற்பு விழாவில் முதல்வர் கலந்துகொண்டிருக்கமாட்டாரா? பொறுப்பு நீதிபதியாக நீதிபதி ராஜா 7 மாதங்கள் இருந்தார். அதேபோல், நீதிபதி வைத்தியநாதன் 7 நாட்கள் இருந்தார். இன்னும் 2 நாட்கள் பொறுப்பு நீதிபதி இருந்தால், என்ன குறை வந்துவிடப்போகிறது. வெளிநாட்டில் இருந்து முதல்வர் இங்கு வருவதற்குள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்றுக் கொள்கிறார். இதெல்லாம் யாருடைய தூண்டுதல் என்பது மக்களுக்குத் தெரியாமல் இல்லை" என்று பேசினார்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா: "இன்றைக்கு பலரும் என்ன செய்தது திராவிட அரசு என்று பேசுகிறார்கள். அண்ணா அதன்பிறகு கருணாநிதி தலைமையிலான திமுக அரசு இங்கு நிலைப்பெற்றதால்தான், சாதாரண சாமான்ய குடிமக்கள், 'ன்' விகுதியால் அழைக்கப்பட்டவர்கள், 'ர்' விகுதியாக மாற்றப்பட்டு, ஒவ்வொருவரின் பெயருக்குப் பின்னால், அவர்களுடைய சாதி பெயர் ஒட்டிக்கொண்டிருக்கும் நிலை இன்றைக்கு வடஇந்தியாவில் இருந்தாலும், தமிழகத்தில் சாதியை ஒழித்துவிட்டு ஒவ்வொருவரின் பெயருக்குப் பின்னாலும் எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.பில், பி.ஹெச்டி என்று பதிவிடும் நிலை தமிழகத்தில் சாதாரண சாமான்ய மக்களுக்கும் கிடைத்து என்றால், அண்ணாவின் பாதையில் கருணாநிதி அனைத்து மக்களையும் முன்னேற்ற வேண்டும் அடிப்படையில் எடுத்து வைத்த முன்னெடுப்புகள்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை" என்று பேசினார்.
முன்னதாக, ஜவாஹிருல்லா பேச வந்தபோது பள்ளிவாசலில் தொழுகை பாடல் ஒலித்தது. தொழுகை முடியும்வரை ஜவாஹிருல்லாவும் பேசாமல் அமைதியாக நின்றார். பிறகு பேசியவர், ``இதை எதிர்பாராத நிகழ்வு என்று கூறிவிட முடியாது. சிறுபான்மைச் சமூகத்தினருக்கும், கலைஞருக்கும் இருக்கும் பந்தத்தையே இந்த நிகழ்வு உணர்த்துகிறது" என்றவர், "இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் கருணாநிதி காட்டிய கருணை இன்று தேவைப்படுகிறது" என்று முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன்: "கருணாநிதி பெயரில், பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். தமிழகத்தில் சென்னையில் அமைக்கப்படும் இந்த அரங்கம், வெறும் கலைஞர் அரங்கமாக மட்டும் இல்லாமல், டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானம் எப்படி விசாலமானதாக இருக்கிறதோ அதுபோன்றதொரு கலையரங்கத்தை இந்த தமிழ் மண்ணில் உருவாக்க முதல்வர் பாடுபட வேண்டும். அதேபோல், தமிழகத்தில் உள்ள எந்தவொரு பல்கலைக்கழகத்துக்கும், தமிழகத்தில் பிறந்த அறிஞர்களின் பெயர் இல்லாமல் இல்லை. ஒரே ஒரு பல்கலைக்கழகம்தான் தமிழகத்தில் பெயர் இல்லாமல் இருக்கிறது. அது சென்னைப் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்துக்கு கருணாநிதியின் பெயரைச் சூட்ட அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT