Published : 08 Jun 2023 12:08 AM
Last Updated : 08 Jun 2023 12:08 AM

கருணாநிதி 100 நிகழ்வு | சனாதனத்தை வீழ்த்த அன்று கருணாநிதி; இன்று ஸ்டாலின் - கே.பாலகிருஷ்ணன் பேச்சு

சென்னை: "சனாதனத்தை வீழ்த்த தேசம் இன்று முதல்வர் ஸ்டாலினை எதிர்பார்க்கிறது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திமுக தலைவராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, அவரது பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி தொடங்கியது. இதற்காக அரசு சார்பிலும் திமுக தரப்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக துக்கம் அனுசரிக்கப்பட்டதால், ஒரு சில நிகழ்வுகள் தவிர மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், புதன்கிழமை மாலை நடைபெற்றது. பின்னி மில் வளாகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த கி.வீரமணி,கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், கே.எம்.காதர்மொய்தீன், திருமாவளவன், எம்.எச்.ஜவாஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன், தி.வேல்முருகன் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் கருணாநிதி போல் தலைவர்கள் யாருமில்லை. அரைவேக்காடு ஆளுநருக்குக் கருணாநிதியின் அறிவில் அரை சதவீதம் கூட இல்லை.

ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று எந்த ஒரு கட்சியும் நினைக்கும். ஆனால், நாட்டிற்கு ஒரு பிரச்சனை என்று வரும் போது அப்பிரச்சனையை விடப் பதவி முக்கியமல்ல என எண்ணியவர் கருணாநிதி. இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டைச் சட்ட பாதுகாப்போடு கொடுத்தவர் அவர், அருந்ததிய மக்களுக்கு 3% இட ஒதுக்கீட்டைக் கொடுத்தவரும் அவரே.

இன்று சனாதனத்தை அரியணை ஏற்ற நினைக்கிறார்கள். கருணாநிதிக்கான நூற்றாண்டு விழா சனாதனத்திற்குச் சாவுமணி அடிக்கும் விழாவாக உள்ளது. அன்று தேசம் கருணாநிதியை எதிர்பார்த்தது. அதுபோன்று இன்று சனாதனத்தை வீழ்த்த முதல்வர் ஸ்டாலினை எதிர்பார்க்கிறது" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x