Published : 07 Jun 2023 08:04 PM
Last Updated : 07 Jun 2023 08:04 PM

கோயில் அறங்காவலர்களாக அரசியல்வாதிகளை நியமிப்பதை தவிர்க்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் மட்டுமே அறங்காவலர்களை நியமிக்கக் கூடாது. அறங்காவலராக நியமிக்கப்படுபவர் ஆன்மிகவாதியாகவும், பக்தராகவும் இருக்க வேண்டும். அரசியல்வாதிகளை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக கோயில்கள் பாதுகாப்பு தொடர்பாக நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இதில் சில உத்தரவுகளை அமல்படுத்திய தமிழக அரசு, சில உத்தரவுகளை மறு ஆய்வு செய்யக் கோரியும், விளக்கம் கேட்டும் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: "கோயில்களையும், அதன் சொத்துகளையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மட்டுமல்லாமல், கலாச்சாரம் - மரபு அடங்கிய கோயில்களையும், பாதுகாக்க வேண்டும்.மாநில அளவிலான புராதன ஆணையத்தில் ஏற்கெனவே 16 பேர் உள்ள நிலையில், அறநிலையத் துறையை சேர்ந்த ஒருவரை சேர்ப்பதில் தவறு இல்லை. இதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பாதுகாக்க சட்டம் இயற்றுவதில் தீர்க்கமாக இருப்பதாக கூறிவரும் தமிழக அரசு, நீதிமன்ற உத்தரவுகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது? பொது நலன் கருதி சட்டம் இயற்ற நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. தமிழ்நாடு புராதன ஆணைய சட்டத்தில் கோயில்களும் அடங்கும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலங்களான கோயில்களையும் மாநில அளவிலான புராதன ஆணையத்தில் சேர்க்க வேண்டும்.

அதேபோல கோயில்களின் வருமானம், செலவு ஆகியவை மத்திய கணக்கு தணிக்கை துறையால் தணிக்கை செய்யப்படுவதன் மூலம், மாநில அரசின் உரிமை ஏதும் பறிக்கப்படாது. தற்போது இருக்கக் கூடிய முறையுடன் மத்திய கணக்கு தணிக்கை துறையும் தணிக்கை செய்யலாம்.கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை ஒதுக்கீடு செய்வதாக இருந்தால், அதன்மூலம் கோயிலுக்கு பலன் இருக்க வேண்டும். அறநிலையத் துறை சட்டத்தின்படியே இந்த ஒதுக்கீடு இருக்க வேண்டும்.

கோயில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும். கோயிலின் அன்றாட நிர்வாகத்தில் அறங்காவலர்கள் முக்கிய பங்கு வகிப்பதால், அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் மட்டுமே அறங்காவலர்களை நியமிக்கக் கூடாது. அறங்காவலராக நியமிக்கப்படுபவர் ஆன்மிகவாதியாகவும், பக்தராகவும் இருக்க வேண்டும். அரசியல்வாதிகளை நியமிப்பதை தவிர்க்க வேண்டும். அறங்காவலர்களின் நியமனம் பக்தர்களின் பங்களிப்புடன், வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும்" என உத்தரவிட்டு, அரசின் மறு ஆய்வு மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x