Published : 07 Jun 2023 05:25 PM
Last Updated : 07 Jun 2023 05:25 PM
காரைக்குடி: சிங்கப்பூரில் பணிபுரிந்தபோது தடை செய்யப்பட்ட அமைப்புக்கு நிதியுதவி அளித்தது தொடர்பான புகாரை விசாரிக்க காரைக்குடி பிரமுகரை அமலாக்கத் துறை அதிகாரிகள் மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது (43). இவர் சிங்கப்பூரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு, அங்கிருந்து இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு நிதியுதவி அளித்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்திய சிங்கப்பூர் போலீஸார், சாகுல் ஹமீதுவின் பணி அனுமதியை ரத்து செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலும் இந்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஊருக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இன்று காலை 7.30 மணிக்கு வைத்தியலிங்கபுரத்தில் சாகுல் ஹமீது வீடு, செஞ்சை பள்ளிவாசலில் உள்ள சாகுல் ஹமீது மாமனார் முகமது அலிஜின்னா (75) வீடு ஆகியவற்றில் மதுரை அமலாக்கத் துறை அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் கொண்ட 10 பேர் விசாரணை நடத்தினர்.
தடை செய்யப்பட்ட இயக்கத்துடனான தொடர்பு, பணி பரிவர்த்தனை குறித்து அவர்களது குடும்பத்தினரிடமும் தொடர்ந்து 7 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர். இருவரது வீடுகளிலும் பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், மொபைலை கைப்பற்றியதோடு, சாகுல் ஹமீதை விசாரணைக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் முகமது அலி ஜின்னாவை நாளை (ஜூன் 8) மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு கூறி, சம்மன் கொடுத்துச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT