Published : 07 Jun 2023 05:02 PM
Last Updated : 07 Jun 2023 05:02 PM
சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில், கடந்த 2018 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் சாலைகளை சீரமைக்க, 300 கொடி ரூபாய் மதிப்பிலும், மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு 290 கோடி ரூபாய் மதிப்பிலும், 37 டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த டெண்டர் ஒதுக்கீட்டில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி , அப்போதைய மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறி, அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, இதுகுறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2020-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, "இந்த புகார் தொடர்பாக 2019-ம் ஆண்டே ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணை முடிவடைந்து விட்டது. மேலும், இந்த ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம், கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டுள்ளது. இதனால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை. எனவே, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க அனுமதியளிக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், "ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசுதான். சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதில் இருந்து மாநில அரசை தடை செய்ய முடியாது. எனவே, ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கலாம்" என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT