Published : 07 Jun 2023 12:39 PM
Last Updated : 07 Jun 2023 12:39 PM

ஆவின் பால் திருட்டு குறித்து உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்: ராமதாஸ்

ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: ஆவின் பால் திருட்டு குறித்து உயர்நிலை விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையிலிருந்து, ஒரே பதிவு எண் கொண்ட இரு ஊர்திகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் 2500 லிட்டர் பால் திருடப்பட்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பால் திருட்டு நடைபெற்று வந்திருக்கிறது.

இந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் லிட்டர் பால் திருடப்பட்டிருக்கிறது. அதன் மொத்த மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. நீண்டகாலமாக நடைபெற்று வரும் ஆவின் பால் திருட்டை சம்பந்தப்பட்ட நிறுவனம் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்திருப்பது கண்டிக்கத்தக்கது.

ஒரே பதிவு எண் கொண்ட இரு ஊர்திகளை பயன்படுத்தி ஆவின் பால் திருடப்பட்டதால், ஐயம் எழவில்லை என்றும், அதனால் தான் இந்தத் திருட்டை நீண்டகாலமாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் ஆவின் உயரதிகாரிகள் சார்பில் கூறப்படுவதை ஏற்கமுடியாது. ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்யப்பட்ட பாலின் அளவும், விற்பனை செய்யப்பட்ட பாலின் அளவும் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை கணக்குகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். இந்த நடைமுறைகள் எதிலுமே பால் திருட்டு கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை நம்ப முடியவில்லை.

வேலூர் சத்துவாச்சாரி பால் பண்ணையில் பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் முறைகேடுகள் நடப்பதாக சில மாதங்களுக்கு முன் குற்றஞ்சாட்டிய மேலாளர் ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஆவின் நிறுவனத்தில் கண்காணிப்பு அதிகாரிகளாக காவல்துறை கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரிகள் முதல் காவல்துறை தலைவர் நிலையிலான அதிகாரிகள் வரை இருந்திருக்கின்றனர்.

அவர்களை மீறி எந்த முறைகேடும் நடந்திருக்க முடியாது. ஆனால், பல ஆண்டுகளாக வேலூர் ஆவினில் பால் திருட்டு நடைபெற்றிருப்பதால் அதற்கு உயர்பதவிகளில் உள்ளவர்களின் ஆதரவு இருந்திருக்கலாம் என்று ஐயங்கள் எழுப்பப்படுவதை ஒதுக்கித்தள்ள முடியவில்லை.

ஆவின் நிறுவனம் மக்களுடன் ஒருங்கிணைந்த நிறுவனம் ஆகும். ஆவின் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வலுப்படுத்தப்பட்டு அசைக்க முடியாத பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட வேண்டும். ஆனால், சுயநலமும், பேராசையும் கொண்டவர்களால் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஆவின் நிறுவனம் சுரண்டப்பட்டே வந்திருக்கிறது. இதற்கு முன் ஆவின் நிறுவனத்திற்காக கொள்முதல் செய்யப்பட்ட பாலில் பெருமளவு கலப்படம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது;

இப்போது பெருமளவில் பால் திருடப்பட்டிருக்கிறது. இதில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக ஆவின் பால் திருட்டு குறித்து உயர்நிலை விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்." என ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x