Published : 25 Oct 2017 12:32 PM
Last Updated : 25 Oct 2017 12:32 PM

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு பரிசோதனை கருவி பற்றாக்குறை: அரசு ராஜாஜி மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் ‘டெங்கு’ கண்டறியும் கருவிகள் இல்லை. இதனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவதால் அங்கு கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 மாதங்களாக ‘டெங்கு’ தீவிரம் அடைந்துள்ளது. மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, திருச்சி, தேனி, தஞ்சாவூர், கரூர், நாமக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமங்கள் வாரியாக சுகாதாரத் துறையினர் கொசு மருந்து அடித்தாலும் ‘டெங்கு’ கொசுவை ஒழிக்க முடியவில்லை.

அரசு மருத்துவமனைகளில் டெங்கு மற்றும் பிற காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழதைகள், பெண்கள், ஆண்களுக்கு தனித்தனியாக சிறப்பு காய்ச்சல் வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ஆனால், அதற்கு ஏற்ப படுக்கை வசதிகள், டெங்கு கண்டறியும் உபகரணங்கள், பரிசோதனை ஆய்வு நுட்புனர்கள் இல்லை. அதனால், நோயாளிகளுக்கு எந்தவிதமான காய்ச்சல் வந்துள்ளது என்பதற்கான பரிசோதனை முடிவுகளை அறிந்துக் கொள்ள தாமதம் ஏற்படுவதாகவும், உரிய நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது.

மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்குத்தான் மேல்சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா அரசு மருத்துவமனைகளில் டெங்குவை கண்டறிய உரிய உபகரணங்கள், ஆய்வு நுட்புனர்கள் இல்லாததே. நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று இரவு 8 மணி வரை 498 பேர் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சைக்காக வந்ததால் அரசு ராஜாஜி மருத்துவமனையில் மிகுந்த இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த சுகாதாரச் செயற்பாட்டாளர் சி. ஆனந்தராஜ் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

மதுரை மாவட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் மேலூர், டி.கல்லுப்பட்டி, கள்ளந்தரி, சமயநல்லூர், வெள்ளளூர், தொட்டப்ப நாயக்கனூர், சேடபட்டி, அலங்காநல்லூர், செல்லம்பட்டி, கள்ளிக்குடி, வாடிப்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட 13 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மட்டும் டெங்கு பரிசோதனைக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 40-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு பரிசோதனைக் கருவிகள் இல்லை. தமிழகத்தில் 1700-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 330 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் டெங்கு கண்டறிவதற்கான கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் 1200-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு கண்டறிவதற்கான மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் அங்கு டெங்கு பரிசோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான வசதிகளை ஏற்படுத்தாததால், தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் அலைக்கழிப்புக்கு உள்ளாகின்றனர். இதனால், சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டு உயிரிழப்புகளும் அதிகரி்த்து வருகிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட அரசு தாலுகா மருத்துவமனைகளிலும் இன்னும் டெங்கு கண்டறியும் பரிசோதனைக் கருவிகள் நிறுவப்படவில்லை. அநேக தாலுகா மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் லேப் டெக்னீஷியன்கள் நியமிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘டெங்கு’ கண்டறியும் உபகரணங்கள் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆரம்பக் கட்ட ஆய்வுகள் மட்டுமே மேற்கொள்ளப்படும். நோய் தீவிரமடையும் நோயாளிகள் மட்டுமே வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x