Last Updated : 23 Oct, 2017 12:27 PM

 

Published : 23 Oct 2017 12:27 PM
Last Updated : 23 Oct 2017 12:27 PM

கழிப்பறைக்குச் சென்று தாமதமாக திரும்பியதால் மாணவிகளை மண்டியிடச் செய்து தண்டனை? - தலைமை ஆசிரியை மீது பெற்றோர் குற்றச்சாட்டு

திருப்பத்தூர் அருகே கழிப்பறைக்குச் சென்று தாமதமாக திரும்பிய 15-க்கும் மேற்பட்ட மாணவிகளை மண்டியிடச் செய்ததாக தலைமை ஆசிரியை மீது பெற்றோர் புகார் செய்துள்ளனர்.

திருப்பத்தூர் ஒன்றியம், திம்மணாமுத்தூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பசிலிகுட்டை, திம்மணாமத்தூர், ஏ.கே.மோட்டூர் மற்றும் சவுடேகுப்பம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்

இந்நிலையில், உணவு இடைவேளையில் கழிப்பறைக்குச் சென்ற மாணவிகளை மண்டியிடச் செய்து தண்டித்ததாக அப் பள்ளியின் தலைமை ஆசிரியை தென்றல் மீது பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது குறித்து பெற்றோர் தரப்பில் கூறியதாவது:

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் பழனிச்சாமி, எக்காரணத்தை கொண்டும் பள்ளி மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் தண்டிக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், திம்மணாமுத்தூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் தென்றல் என்பவர் மாணவர்களிடம் அதிக கண்டிப்பு காட்டுகிறார்.

சவுடேகுப்பத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் தினேஷ்குமார் என்பவர் வீட்டுப் பாடங்களை சரிவர செய்து வரவில்லை எனக் கூறி அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரம்பால் அடித்துள்ளார். இதனால், மாணவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மாணவரை அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இடைவேளை நேரத்தில் கழிப்பறைக்குச் சென்ற 15-க்கும் மேற்பட்ட மாணவிகள் தாமதமாக வகுப்புக்குத் திரும்பியதாக கூ,றி பகல் 11 மணிக்கு விளையாட்டு மைதானத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மண்டியிடச் செய்துள்ளார்.

இதனால், மாணவிகள் உடலாலும், மனதாலும் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் எங்களிடம் கூறி அழுதனர். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை தென்றலிடம் கேட்டபோது, அவரது பதில் வேறு மாதிரி இருந்தது. எனவே, தலைமை ஆசிரியை தென்றலிடம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து திம்மணாமுத்தூர் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தென்றலிடம் கேட்டபோது,‘‘ மாணவ, மாணவிகளை ஒழுக்கப்படுத்துவது எனது தலையாய கடமை. அதேநேரத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற நான் அரும்பாடுபட்டு வருகிறேன்.

கல்வித் தரத்தையும், கற்பித்தல் முறையையும் செம்மைப்படுத்தி வருவதால், இங்கு பணியாற்றி வரும் சிலருக்கு என் மீது காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. கழிப்பறைக்குச் சென்ற மாணவிகள் அரை மணி நேரத்துக்கும் மேலாக வகுப்பறைக்கு திரும்பாமல் வகுப்பை புறக்கணித்தனர்.

பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவிகளின் நலன் கருதியே கண்டிப்புடன் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதை சிலர் பெரிதாக்கி என் மீதும் பழி சுமத்துகின்றனர்.

மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இது குறித்து ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x