Published : 11 Oct 2017 03:17 PM
Last Updated : 11 Oct 2017 03:17 PM
பாலக்காட்டிலிருந்து பொள்ளாச்சிக்கு செல்லும் சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பிளாச்சிமடை. இக் கிராமத்தை கடப்பவர்கள் இங்குள்ள பேருந்து நிறுத்தத்தின் இடது பக்கம் வெறிச்சோடி கிடக்கும் சமரப் பந்தலை (போராட்டப் பந்தல்) பார்த்து சற்றே புருவம் உயர்த்துகிறார்கள். அதிசயப்படவும் செய்கிறார்கள். 'என்ன சமரம் முடிஞ்சு போச்சா?' என ஒருவருக்கொருவர் கேட்கவும் செய்கிறார்கள். இல்லையில்லை. இப்போதைக்கு 'தற்காலிக ஓய்வு!'என சிலர் பதில் சொல்லவும் செய்கிறார்கள். பதிலுக்கு 'அதுதானே 15 வருஷ போராட்டம் அத்தினி சுலபமா முடிஞ்சுடுமா?' என்று சிலர் ஆசுவாசப்பட்டுக் கொள்வதும் நடக்கிறது.
உழைத்து, உழைத்து ஓடாய்த் தேய்ந்த மனிதன் ஓய்வெடுக்கலாம். ஓடாத ஓட்டம் ஓடி ஓர் எல்லையை எட்டிய ஒரு சத்தியாகிரகப் போராட்டம் (சமரம்) ஓய்வெடுக்கக்கூடாதா என்ன? அப்படித்தான் 15 ஆண்டுகாலம் ஓயாது நடந்து வந்த சத்தியாகிரக போராட்டம் தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆச்சர்யமாக மட்டுமல்ல; இதன் வரலாற்றைக் கேட்டால் சங்கடமாகவும் இருக்கும்.
கிழிசல்களாய் தொங்கும் நீண்டதொரு ஓலைக்கூரை. தகரக்கதவால் அடைக்கப்பட்ட வாயில். நார், நாராய் கிழிந்திருக்கும் கிழிசல்கள் வழியே உள்ளே பார்த்தால் மலையாளத்தில் எழுதப்பட்ட, சாயம்போன துணியில் போராட்ட வாசகங்கள். ஓரமாய் அடுக்கி வைக்கப்பட்ட தட்டிகள். ஒன்றுக்கு மேல் ஒன்றாக செருகப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் நாற்காலிகள் நான்கைந்து... இந்தக் கூடாரம்தான் சமரப் பந்தல். இதன் எதிரே பாழடைந்து பூட்டப்பட்டிருக்கும் தொழிற்சாலைதான் சமரப் பந்தலுக்கான காரணி.
இந்த தொழிற்சாலையை 17 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவியது உலகளாவிய புகழ்பெற்ற ஒரு தனியார் குளிர்பான கம்பெனி. அப்போது குளிர்பானத்திற்கான தண்ணீருக்கு 10க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை தோண்டியது. இதனால் சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் குறைந்ததோடு, இந்த ஆலை வெளியிட்ட கழிவுகள் சுற்றுவட்டார கிணறுகளையும் மாசுபடுத்தியது. வேளாண்மையோ பாழானது. இங்கு வசிக்கும் பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட் சமூகத்தை மக்களின் ஓயாத எதிர்ப்பும், போராட்டமும் தொழிற்சாலையை மூட வைத்தது.
உச்ச நீதிமன்றம் வரை சென்ற இப்பிரச்சினையில் குளிர்பான நிறுவனம் வெற்றியடைய முடியவில்லை. என்றாலும் மக்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. ஆலை முன்பு பந்தல் போட்டு இரவு, பகல் பாராது தினம் ஒரு குழுவாக சத்தியாகிரகப் போராட்டங்களை நடத்தினர். இடையிடையே மறியல் போராட்டம், ஆலை முற்றுகைப் போராட்டம், போலீஸ் தடியடியெல்லாம் நடந்து உலகளாவிய பரபரப்பு ஆனது.
'இந்த தொழிற்சாலையை இங்கிருந்து அடியோடு அகற்ற வேண்டும். சொறி, சிரங்கு மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பாழ்பட்ட விவசாய நிலங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்!' என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக இருந்தது.
அதற்காக உண்மை அறியும் குழுவை கேரள அரசு அமைத்தது. அந்த குழு, இந்த நிறுவனத்தினால் ஏற்பட்டுள்ள இழப்புகள் ரூ. 216.26 கோடி என கணக்கிட்டு அறிக்கை அளித்தது.
இதன் மீது விவாதம் நடத்திய கேரள அமைச்சரவை இந்த தொகையை இந்த தனியார் நிறுவனத்திடம் பெற்று, உரியவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், அதற்கு தீர்ப்பாயம் அமைக்கவும் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது. அனுப்பிக் கொண்டேயிருந்தது. அதிலும் அரசியல் காரணங்களால் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் தீர்வு ஏற்படவில்லை.
'இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டிய அவசியமே இல்லை. கேரள அரசே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இதற்கு வழிவகை செய்யலாம். அதை செய்யாமல் இருப்பதே மாறி, மாறி வரும் அரசாங்கத்தின் தன்மையாக இருக்கிறது. எனவே இதில் மாநில அரசே தீர்வு காணவேண்டும்!' எனக் கோரி போராட்டக்காரர்கள் பாலக்காடு ஆட்சியர் அலுவலகம் எதிரே கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலவரையற்ற தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.
ஆக, பிளாச்சிமடையில் தொழிற்சாலை முன்பு ஒரு நீண்ட நெடிய போராட்டம்; ஜில்லா கலெக்டர் அலுவலகம் முன்னாடியும் ஒரு தொடர் தர்ணா என ஒரே பிரச்சினைக்காக இரண்டு வகை போராட்டங்களை கேரள அரசு எதிர்கொண்ட நிலையில் கடந்த மாதம் இந்த குளிர்பானக் கம்பெனியை நிரந்தரமாக பூட்டிவிட நீதிமன்ற உத்திரவு பிறப்பித்தது. அதே நேரத்தில் இந்த தொழிற்சாலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈட்டுத்தொகையை பெற்றுத்தர ஆவண செய்வதாக அரசு உத்தரவாதம் கொடுத்தது.
அதையடுத்து ஜில்லா கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வந்த தர்ணா போராட்டம் கை விடப்பட்டது. அதே சமயம் குளிர்பானக் கம்பெனி முன்பு நடந்த வந்த சமரப் பந்தலிலும் போராட்டக்காரர்கள் வராமல் வெறிச்சோடிக் கிடக்கிறது. எனவேதான் இதை பார்த்து சிலர், 'என்ன சமரம் முடிஞ்சு போச்சா?' என்றும், பதிலுக்கு சிலர் 'தற்காலிக ஓய்வு!' என பதில் சொல்வதும் நடக்கிறது போராட்டத்தில் என்ன தற்காலிக ஓய்வு. இந்த போராட்டக்குழுவில் அங்கம் வகிக்கும் ஆதிவாசி சம்ரசன சங்கத்தின் கன்வீனர்கள் தங்கவேலு மற்றும் முருகேசன் விளக்கினார்கள்.
''எங்கள் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கெடுக்கிறது. தொழிற்சாலை நிரந்தரமாக அகற்றப்படும்னு சொன்னதுக்கு பின்னாடி ஜில்லா கலெக்டர் அலுவலக சமரம் மட்டுமே விலக்கிக் கொள்ளப்பட்டது. நஷ்ட பரிகாரத்தை பொறுத்தவரை 3 மாதங்களுக்குள் தீர்த்து வைப்பதாக சர்க்கார் சொல்லியிருக்கு. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த சமரப் பந்தல் பழுதடைஞ்சு கிடக்கு. இது ஓலைத்தடுக்கால் வேயப்பட்டிருப்பதால வருஷத்துக்கு ஒரு தடவை புதிசா போட ஐயாயிரம், பத்தாயிரம் ரூபான்னு செலவு செய்ய வேண்டியிருக்கு. அதனால கொஞ்சம் கூடுதல் செலவு பிடிச்சாலும் பராவாயில்லைனு தகர மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட முடிவு செஞ்சிருக்கோம்.
அந்த வேலை இப்ப நடக்கறதாலதான் சமரத்த தற்காலிகமா நிறுத்தி வச்சிருக்கோம். சமரம் நின்றிருந்தாலும், நாங்க அங்கங்கே இங்கே இருந்துட்டுதான் இருக்கோம். இன்னும் ஓரிரு மாசத்துல மீண்டும் சமரம் தொடங்கிடும். நஷ்ட பரிகாரம் பெற்ற பின்னாடிதான் அதுக்கு ஒரு முடிவு வரும்!'' என்று சொன்னார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT