Published : 07 Jun 2023 06:12 AM
Last Updated : 07 Jun 2023 06:12 AM

சர்வதேச விமான நிலையமாவதில் மதுரைக்கு என்னதான் சிக்கல்?

‘அன்டர் பாஸ் ரன்வே’ திட்டம் அமைப்பதற்காக திட்டமிடப்பட்ட நான்குவழிச்சாலை. படம்: நா.தங்கரத்தினம்

மதுரை: சென்னை, கோவை, திருச்சிக்கு அடுத்த நான்காவது பெரிய விமான நிலையமாக மதுரை உள்ளது. 1957-ல் நிறுவப்பட்ட மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக அறிவிக்க 25 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை இருந்து வருகிறது.

ஒரு விமானநிலையம் சர்வதேச நிலையமாக அறிவிக்க 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். ஆனால், மதுரை விமானநிலையத்தில் இருந்து இரவு நேரத்தில் விமானங்கள் இயக்கப்படவில்லை. அதற்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் பற்றாக்குறை என காரணம் கூறப்பட்டது.

பின்னர் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் செயல்படும் விமானநிலையமாக மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. ஆனால், திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. அதற்காக தற்போது வரை இரவு நேரத்தில் விமானங்கள் இயக்கப்படவில்லை என்பது, விமானநிலையத் துறை அதிகாரிகளுக்கே விவரம் தெரியவில்லை.

தென் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளும் மக்களவையில் கேள்வி எழுப்புவதோடு சரி, அதற்காக தொடர் அழுத்தம் கொடுப்பதில்லை என்று குற்றச்சாட்டு மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இந்நிலையில், மதுரை விமானநிலையத்தை விரிவாக்கம் செய்ய 2009-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி 14 ஆண்டுப் போராட்டத்துக்குப் பிறகு தற்போது (2023) நிறைவு பெற்றது. ஒப்படைக்கப்பட்ட இந்த இடத்தைச் சுற்றி ரூ.35 கோடியில் சுற்றுச்சுவர் கட்டி ஓடுபாதையை விரிவாக்கம் செய்யும் பணியை தவிர மற்ற பணிகள் மதுரை விமானநிலையத்தில் தொடங்கி உள்ளது.

மதுரை விமானநிலைய ஓடுபாதை 7,500 அடி உள்ளது. இதை 5 ஆயிரம் அடி அதிகரித்து 12,500 அடியாக உயர்த்தவே விமானநிலைய விரிவாக்கத் திட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓடுபாதையை விரிவாக்கம் செய்தால் மட்டுமே பெரிய ரக விமானங்கள் விமானநிலையத்துக்கு வந்து செல்ல முடியும். அதன் மூலம் சர்வதேச விமானநிலையமாக மதுரையை அறிவிக்க முடியும். ஆனால், ஓடுபாதை விரிவாக்கத் திட்டம் ஏன் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.

ஜெகதீசன்

இது குறித்து தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: மதுரை, மைசூர், சண்டிகர் உட்பட 5 விமானநிலையங்களில் ‘அன்டர் பாஸ் ரன்வே’ அமைக்க மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பப்பட்டது. இதில் மதுரையைத் தவிர மற்ற விமானநிலையங்களில் ‘அன்டர் பாஸ் ரன்வே’ திட்டம் அமைக்கப்படுகிறது.

மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தும் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் மதுரையில் ‘அன்டர் பாஸ் ரன்வே’ திட்டத்தை அமைக்க முன் வரவில்லை. அதனால், மதுரையில் ‘அன்டர் பாஸ் ரன்வே’ விரிவாக்கப் பணிகள் திட்டமிட்டபடி நடக்கவில்லை.

அண்மையில் திருச்சி விமானநிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கம் செய்வதற்கு புதுக்கோட்டை சாலையில் ‘ரன்வே அன்டர் பாஸ்’ திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களில் ‘ரன்வே அன்டர் பாஸ்’ திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அமைக்கிறது.

ஆனால், மதுரையில் ‘அன்டர் பாஸ் ரன்வே’ திட்டம் அமைக்காததற்கு, திட்டம் அமையும் ‘ரிங் ரோடு’ சாலை மாநில நெடுஞ்சாலைத் துறை வசம் இருக்கிறது. பாண்டி கோயிலில் தொடங்கி கப்பலூர் சந்திப்பு வரையிலான ‘ரிங் ரோடு’ தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் வசம் இருக்கிறது.

இந்தச் சாலையில் சிந்தாமணி, வண்டியூர், வலையங்குளம் ஆகிய இடங்களில், சுங்கச்சாவடி அமைத்து வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாலையை ஒப்படைக்காமல் சுங்கக் கட்டணம் வசூலிப்பதால் அந்தச் சாலையில் நாங்கள் எப்படி விமான நிலையத்துக்கான ‘அன்டர் பாஸ் ரன்வே’ திட்டத்தை அமைப்போம் என்று மறுத்துவிட்டார்கள். இதுதான், மதுரை விமானநிலைய ‘அன்டர் பாஸ் ரன்வே’ திட்டம் கிடப்பில்போட முக்கியக் காரணமாகும்.

‘அன்டர் பாஸ் ரன்வே’ இல்லாமல் மாற்று வழிப்பாதைத் திட்டம் அமைக்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. அதற்கான நிலத்தை கையகப்படுத்தி, அதில் நான்குவழிச்சாலை போட்டு விமானநிலைய ஓடுபாதையை விரிவுபடுத்த இன்னும் 10 ஆண்டுகளாகும். அப்படி நடந்தால் மதுரை விமானநிலையம் இன்னும் 10 ஆண்டுகள் பின்தங்கும் அவலம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

மதுரையில் ‘எய்ம்ஸ்-ஐ தொடர்ந்து விமானநிலைய ஓடுபாதைத் திட்டத்திலும் மத்திய, மாநில அரசுகள் இடையே நீடிக்கும் பிடிவாதம், மோதல் போக்கால் மதுரையின் வளர்ச்சி தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறது என மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை எம்பி கூறுவது என்ன? - மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறுகையில், ‘‘மதுரை விமானநிலைய ஓடுபாதை விரிவாக்கத் திட்டத்தில் ‘அன்டர் பாஸ் ரன்வே’ திட்டத்துக்கு ரூ.800 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நிலத்தை கையகப்படுத்தி தற்போது உள்ள ‘ரிங்’ ரோடுக்கு மாற்றுப்பாதை அமைத்து ஓடுபாதையை விரிவாக்கம் செய்ய ரூ.100 கோடி மட்டுமே செலவாகும். அதனால்தான், மத்திய அரசு ‘அன்டர் பாஸ் ரன்வே’ திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை.

மேலும், மாநில அரசு தற்போது உருவாக்கி உள்ள நிலம் கையகப்படுத்தும் விதியில் மத்திய அரசுத் திட்டங்களுக்காக ஒப்படைக்கப்படும் நிலத்தை, அந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்தவில்லை எனில் மீண்டும் மாநில அரசிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும், அந்த நிலத்தை மத்திய அரசு தனியாருக்கு விற்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள மறுப்பதாலே ‘அன்டார் பாஸ் ரன்வே’ திட்டத்துக்கு மாற்றான திட்டமும் தாமதமாகுவதற்கு முக்கியக் காரணம், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x