Published : 20 Oct 2017 09:19 PM
Last Updated : 20 Oct 2017 09:19 PM
நொய்யலாற்று தண்ணீரை பாசன வசதிக்கு பயன்படுத்த சோழர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை கோவையில் உள்ள குளங்கள். மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட இந்த குளங்களுக்கு ஆற்றிலிருந்து நீர் செல்ல 12-ம் நூற்றாண்டிலேயே 32 தடுப்பணைகளும், அதற்குரிய ராஜ வாய்க்கால், உப வாய்க்கால், கிளை வாய்க்கால்களும் ஏற்படுத்தப்பட்டன.
நகரின் அசுர வளர்ச்சியாலும், ஆக்கிரமிப்புகள் பெருக்கத்தாலும் அவற்றில் பல குளங்களும், அணைக்கட்டுகளும், வாய்க்கால்களும் காணாமலே போய்விட்டன. எஞ்சியிருக்கிற குளங்களும் மாநகர சாக்கடைகள், சாய, சலவைப் பட்டறை மற்றும் பல்வேறு ஆலைக்கழிவுகளாலும் பாழ்பட்டு வருகின்றன. இதில் மாவட்டத்தின் நடுமையத்தில் உள்ள சூலூர் இரட்டைக் குளங்கள் மட்டும் பாதுகாக்கப்பட்டு சுமார் 400 ஏக்கர் விவசாயப் பாசனத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நொய்யலில் எப்போதாவது தண்ணீர் வரும்போது மட்டும் குளங்கள் நிரம்பவதும் மற்ற காலங்களில் சாக்கடைகளால் நாறுவதும் பார்த்து இங்குள்ள விவசாயிகளே இதற்கு மாற்று ஏற்பாடு கண்டனர். இங்குள்ள இரு குளங்களுக்கு வரும் நொய்யலுக்கு நேரெதிர் திசையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் மரப்பால பள்ளம் என்று ஒன்று உள்ளது. அதன் அருகில் உள்ள கலங்கல் கிராமத்திலிருந்து வரும் காட்டாற்று தண்ணீர் இந்த பள்ளத்துக்கு வரும். அந்த தண்ணீரை திசைதிருப்பி, அங்கேயே ஒரு குட்டை வெட்டி, அதில் மழைக்காலங்களில் நீரை நிரப்பினார்கள். அதை அங்கிருந்து வாய்க்கால் மூலம் குளங்களுக்கு கொண்டு வர நொய்யலையே நம்பியிருக்க வேண்டிய நிலை அகன்றது.
மழைக்காலங்களில் தண்ணீரை இந்த குளங்களில் இப்படி விடவும், வாய்க்கால்களை பராமரிக்கவும், நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது, அதன் அணையிலிருந்து மடைக்கு தண்ணீர் திறந்துவிடவும் விவசாயிகளுக்குள்ளேயே கட்சி சார்பற்ற முறையில் விவசாயிகள் சூலூர் குளம் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார்கள். இதற்கான செலவுகளையும் இவர்களுக்குள்ளேயே பகிர்ந்தும் கொண்டார்கள். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வகையில் இந்த இரண்டு சூலூர் குளங்கள் சுத்தமான குளங்களாக பாசனத்திற்கும் பயன்பட்டு வருகிறது.
நிலைமை இப்படியிருக்க கடந்த மாதம் பெய்த பெரு மழையில் நொய்யலில் வெள்ளம் வந்ததைத் தொடர்ந்து இந்த குளத்து நீர் கடந்த சில நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. இதை சூலூர் மக்கள் மட்டுமல்ல, சூலூர் குளத்தின் வழியே வருவோர் போவோரும் விநோதமாக பார்த்து செல்கிறார்கள்.
''எங்கள் அனுபவத்தில் இந்த குளம் இப்படி நிறம் மாறியதை பார்த்ததேயில்லை. குளத்தில் என்னவோ நடந்திருக்கிறது. மழையின் போது நொய்யலாற்றில் ஏதாவது தொழிற்சாலைகள் விநோத ரசாயனக் கழிவுகளை கலந்து விட்டிருக்க வேண்டும். அதனால்தான் இப்படி இருக்கிறது. இதை மாதிரி எடுத்துக் கொண்டு போய் ஆய்வுக்கூடத்தில் சோதனையிட வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பகுதியில் நிலத்தடி நீரும் பாழ்பட வாய்ப்புண்டு. மீன்களும் செத்து மிதக்க நேரிடும்'' என்று நம்மிடம் புகார் தெரிவித்தார் இப்பகுதியை சேர்ந்த 'தி இந்து' வாசகர் செந்தில்.
இதுகுறித்து முன்னாள் சூலூர் பேரூராட்சி தலைவரும், இந்த குளங்கள் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தியவருமான சூ.ரா. தங்கவேலுவிடம் கருத்துக் கேட்டோம். ''குளத்து நீர் வழக்கத்திற்கு விரோதமாக நிறம் மாறியிருப்பதற்கு காரணம் ஒரு வித பச்சை பாசியே. இதனால் குளத்து நீருக்கு எந்த பாதகமும் இல்லை. மழை, வெள்ளத்திற்கு முன்பு ஒரு பக்கமாக ஆற்றில் வந்த சாக்கடை குளத்தில் கலந்து கொண்டிருந்தது. அதற்குப் பிறகு நொய்யலில் வந்த வெள்ளமும் குளத்திற்கு வந்ததால் இந்த நிறத்தில் காட்சியளிக்கிறது. மற்றபடி முன்னைவிடவே இப்போது குளத்துநீர் சுத்தமாகவே உள்ளது. எங்கள் அமைப்பு சார்பாக இந்த குளத்திற்கு வரும் பள்ளத்து வாய்க்கால் மற்றும் சாக்கடை தண்ணீரையும் சுத்திகரித்து குளத்திற்குள் விட திட்டம் செய்து வருகிறோம். அதற்காக விவசாயிகளின் பங்களிப்புடன் ஒரு சுத்திகரிப்பு நிலையம் நிறுவவும் திட்டமிட்டுள்ளோம். அது நிறைவேறும்போது இதுபோன்ற மாற்றங்கள் கூட நிகழாது'' என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT