Published : 01 Oct 2017 10:30 AM
Last Updated : 01 Oct 2017 10:30 AM
ஆசிரியர்கள், மாணவர்களின் தினசரி வருகையை பதிவு செய்ய பயோ மெட்ரிக் கருவி; குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை; கணினி ஆய்வகம் என சென்னை கொடுங்கையூரில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ஏராளமான நவீன வசதிகள் நிறைந்துள்ளன.
சென்னை கொடுங்கையூர் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அங்கு குன்றுகள்போல் குவிந்து கிடக்கும் குப்பை மேடுகள்தான். அப்படிப்பட்ட இடத்தில்தான் கொடுங்கையூருக்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி பல ஆச்சரியங்களை நிகழ்த்தி வருகிறது.
பள்ளியின் அழகியல்
ஆசிரியர்கள், மாணவர்கள் வருகையை பதிவு செய்வதற்கான பயோ மெட்ரிக் கருவி இப்பள்ளியின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. போதிய இடவசதியின்றி நெருக்கடியான சூழலில்தான் பள்ளி செயல்படுகிறது. எனினும் இருக்கும் இடத்தை மிகவும் அழகியல் உணர்ச்சியோடு ஆசிரியர்களும், மாணவர்களும் பராமரிக்கின்றனர். வளாகத்தில் நுழைந்தவுடனேயே அழகுச் செடிகள் நிறைந்த சிறிய தோட்டம் உள்ளது. வண்ணப் பறவைகள் நிறைந்த கூண்டு இருக்கிறது. வண்ண மீன் தொட்டியில் நீந்திக் கொண்டிருக்கும் மீன்களை மாணவர்கள் நேசத்துடன் பார்க்கின்றனர்.
மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை வளர்க்க அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தங்கள் பிறந்தநாள் போன்ற தினங்களில் சாக்லேட், இனிப்புகள் கொடுப்பதற்கு பதிலாக வகுப்பறை நூலகத்துக்கு நூல்களை மாணவர்கள் தானமாக அளிக்கின்றனர். இவ்வாறு ஒவ்வொரு வகுப்பறை நூலகத்திலும் 75-க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இது தவிர, பள்ளியின் பொது நூலகத்தில் 1,500-க்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கின்றன. தினமும் இரண்டு தமிழ், இரண்டு ஆங்கில நாளிதழ்கள் வாங்கப்படுகின்றன. செய்தித்தாள் வாசிப்புக்காக தனியாக நேரம் ஒதுக்கப்படுகிறது. தலைமை ஆசிரியர் அறைக்கு வெளியே வராண்டாவில் வைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி பெட்டியில் நாள் முழுவதும் பல்வேறு சேனல்களின் செய்திகள் ஒளிபரப்பாகின்றன. இதனால் அன்றாட நிகழ்வுகள் அனைத்தையும் உடனுக்குடன் மாணவர்கள் அறிய முடிகிறது.
வகுப்பறைகள் உட்பட பள்ளி வளாகம் முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளை தலைமை ஆசிரியர் தனது அறையிலிருந்தே கண்காணிக்கும் வகையில் 8 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து வகுப்பறைகளிலும் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டு, ஒலிபெருக்கி வசதி செய்யப்படுள்ளது. இதன்மூலம் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்களை தலைமை ஆசிரியர் அவ்வப்போது வழங்கிவருகிறார்.
இண்டிகேட்டர் பெட்டி
ஒவ்வொரு வகுப்பறையின் நிலைமையும் எவ்வாறு உள்ளது என்பதை வகுப்பறைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள இண்டிகேட்டர் பெட்டி மூலம் அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பெட்டி 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வருகைப் பதிவேடு 90 சதவீதத்துக்கும் மேல் இருந்தால் பச்சை அட்டையும், இல்லையெனில் சிவப்பு அட்டையும் பொருத்தப்பட்டிருக்கும். வகுப்பறை 100 சதவீதம் தூய்மையாக இருந்தால் பச்சை அட்டையும், இல்லையெனில் சிவப்பு அட்டையும் பொருத்தப்படும். வகுப்பறையில் உள்ள எல்லா மாணவர்களும் தூய்மையாக வந்திருந்தால் அதற்கான பகுதியில் பச்சை அட்டை பொருத்தப்படும். மாணவர்கள் சரளமாக எழுத, படிக்க தெரிந்திருக்கிறார்களா என்பது சோதிக்கப்படும். எல்லா மாணவர்களுக்கும் சரளமாக எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் பச்சை அட்டையும், இல்லையெனில் சிவப்பு அட்டையும் இருக்கும். இவ்வாறு ஒவ்வொரு வகுப்பறைக்கும் தினமும் சென்று, வகுப்பறையின் நிலைமையை சோதிப்பதற்காக சில ஆசிரியர்களைக் கொண்ட தனிக்குழு செயல்படுகிறது. இந்த இண்டிகேட்டர் பெட்டியின் 4 பகுதிகளிலும் பச்சை அட்டை இருக்க வேண்டும் என்பதில் வகுப்புகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பள்ளியின் ஸ்மார்ட் வகுப்பறையில் சுழற்சி முறையில் எல்லா மாணவர்களுக்கும் வகுப்புகள் நடைபெறுகின்றன. அந்த அறை முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட கணினிகளுடன் இயங்கும் கணினி ஆய்வகம் நவீன அறிவியல் தொழில்நுட்ப கல்வியை மாணவர்கள் பயில மிகவும் உதவியாக திகழ்கிறது.
பள்ளியில் உள்ள இதுபோன்ற பல வசதிகளின் காரணமாக மாணவர்களின் கற்றல் திறன் வெகுவாக அதிகரித்துள்ளது. 10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இந்த மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளி வளர்ச்சி பற்றி தலைமை ஆசிரியர் யு.முனிராமய்யா கூறும்போது, ‘‘எங்கள் பள்ளி மாணவர்களில் பலரும் ஏழைகள். அவர்கள் தாழ்வு மனப்பான்மை இன்றி, உற்சாகமாக படிக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதியிலேயே படிப்பை கைவிடும் மாணவர்கள் எங்கள் பள்ளியில் அறவே இல்லை. பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 5 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று வரும் இந்தப் பள்ளி, இந்த ஆண்டும் 100 சதவீத தேர்ச்சியை எட்டுவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம். இந்த வெற்றிகள் அனைத்துக்கும் எங்கள் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வே காரணம்’’ என்றார். ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வாங்கிக் கொடுத்து தலைமை ஆசிரியர் அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார்.
பள்ளி ஆசிரியர் பி.கே.இளமாறன் கூறும்போது, “ஏழை மாணவர்களின் வீடுகளில் போதிய வசதிகள் இருக்காது என்பதாலேயே பள்ளியிலேயே அவர்களுக்கான வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்கிறோம். நன்கொடையாளர்கள், சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கல்வித் துறை மூலம் கிடைக்கும் ஊக்கத்தால் எங்களால் சாதிக்க முடிகிறது” என்றார்.
கொடுங்கையூரில் உள்ள இந்த மாநகராட்சி பள்ளியின் ஆச்சரியங்கள் மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 97106 08340
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT