Published : 01 Oct 2017 11:20 AM
Last Updated : 01 Oct 2017 11:20 AM

திமுக உறுப்பினர் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த திட்டம்: அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை இழுக்க முயற்சி

திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த மாவட்டம்தோறும் அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அதிருப்தியில் இருக்கும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை திமுகவில் சேர்க்கவும் முயற்சி செய்து வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிமுக தற்போது 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது. எந்த நேரத்திலும் தமிழகத்தில் தேர்தல் நடக்கலாம் என அரசியல் கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர். எனவே, பல்வேறு கட்சிகளிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணிகள் நடந்து வருகின்றன.

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக, புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியுள்ளது. அதிக அளவில் இளைஞர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு தலைமை உத்தரவிட்டுள்ளது.

இதனால், திமுகவினர் ஏற்கெனவே உள்ள உறுப்பினர்களை புதுப்பிக்கும் பணியிலும், புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு ஒன்றியத்திலும் சுமார் 10 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘கட்சித் தலைமை உத்தரவுப்படி 65 மாவட்டச் செயலாளர்களும், மாவட்டங்கள்தோறும் திமுக உறுப்பினர் புதுப்பிப்பு மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

அதிமுகவினரை இழுக்க...

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினையால் அக்கட்சியின் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். சிலர் ஜெயலலிதாவுக்கு பிறகு தற்போதுள்ள தலைமையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதிருப்தியில் இருக்கும் கிளை, பகுதி நிர்வாகிகள், தொண்டர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர்களும் திமுகவில் இணைய ஆர்வம் தெரிவித்துள்ளனர்’’ என்றார்.

முன்னாள் அமைச்சரும் ஆலந்தூர் தொகுதி எம்எல்ஏவுமான தா.மோ.அன்பரசனிடம் கேட்டபோது, ‘‘தமிழகம் முழுவதும் 365 ஒன்றியங்களிலும் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்த்து வருகிறோம்.

அக்டோபர் 30-ம் தேதி வரை இந்தப் பணி நடக்கும். 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களிடம் திமுக வரலாறு, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள், சமூக நீதி போராட்டங்கள், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்களின் அரசியல் பணிகள் குறித்து எடுத்துக் கூறி வருகிறோம். ஒவ்வொரு ஒன்றியத்திலும் சுமார் 10 ஆயிரம் புதிய வாக்காளர்களை சேர்க்க திட்டமிட்டு, அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம்’’ என்றார்.

சிறப்பு முகாம்கள் மூலம்

முன்னாள் மேயரும் சைதை தொகுதி எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது, ‘‘தமிழகம் முழுவதும் திமுகவுக்கு தற்போது ஒரு கோடி பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். தற்போது நாங்கள் மேற்கொள்ளும் சிறப்பு முகாம்கள் மூலம் ஏராளமான மக்கள் தங்களை திமுக உறுப்பினர்களாக இணைத்துக் கொள்கின்றனர். இதுதவிர, திமுகவினர் வீடுவீடாக சென்று புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர். அதிமுக மட்டுமல்லாமல், பல்வேறு கட்சிகளில் இருந்தும் திமுகவில் சேருகிறார்கள். திமுக உறுப்பினர் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த திட்டமிட்டு பணியாற்றுகிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x