Published : 25 Oct 2017 10:05 AM
Last Updated : 25 Oct 2017 10:05 AM
தேசிய சிறுதொழில் கழகம், எஸ்சி, எஸ்டி தொழில்முனைவோருக்கு ‘இ-டெண்டர்’ முறையில் எவ்வாறு ஆர்டர் பெறுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
தேசிய சிறுதொழில் கழகம் இந்திய அரசின் மினி ரத்னா நிறுவனமாகும். 1955-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் அவற்றைத் தொடங்குவதற்கும் தேவையான உதவிகளை அளித்து வருகிறது. இந்நிலையில், எஸ்சி, எஸ்டி தொழில்முனைவோருக்கு ‘இ-டெண்டர்’ முறையில் எவ்வாறு ஆர்டர் பெறுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து, தேசிய சிறுதொழில் கழகத்தின் துணை பொது மேலாளர் ஆர்.சரவணகுமார் கூறியதாவது: என்ஜினியரிங், ஆட்டோமொபைல், ஃபேப்ரிகேஷன் போன்ற துறைகளில் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர், ஏற்கெனவே தொழில் தொடங்கிவிட்டு இடையில் கடனுதவி தேவைப்படுபவர்கள் மற்றும் தொழிலை விரிவாக்கம் செய்ய விரும்பும் தொழில்முனைவோருக்கு வங்கிக் கடனைப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை எங்களது தேசிய சிறுதொழில் கழகம் மேற்கொண்டு வருகிறது.
ஜாப் ஓர்க் ஆர்டர்
இந்நிலையில், எஸ்சி, எஸ்டி பிரிவு தொழில்முனைவோருக்காக ஒரு புதிய பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இதன்படி, அரசு பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், ஓஎன்ஜிசி, சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், பாரத் பெட்ரோலியம், தெற்கு ரயில்வே ஆகியவற்றில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் ஜாப் ஓர்க்கை ஆர்டர் எடுக்க ‘இ-டெண்டர்’ முறை கையாளப்பட்டு வருகிறது.
இந்த இ-டெண்டரில் விண்ணப்பித்து ஜாப் ஓர்க் ஆர்டர் பெறுவது எவ்வாறு என்பது குறித்து எஸ்சி, எஸ்டி தொழில்முனைவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பயிற்சிபெற விரும்பினால்...
தமிழகம் முழுவதும் உள்ள எங்கள் அலுவலக கிளைகளின் மூலம் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்சி, எஸ்டி தொழில்முனைவோர்கள் இப்பயிற்சி யைப் பெற விரும்பினால் சென்னையில் உள்ள எங்கள் அலுவலகத்தைத் (தொலைபேசி எண். 044-28293347, 28294146) தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு சரவணகுமார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT