Published : 07 Jun 2023 12:07 AM
Last Updated : 07 Jun 2023 12:07 AM

திருவண்ணாமலை | கழிப்பறை கட்டிட மின் இணைப்பால் தடைபட்ட முதல்வர் நிகழ்ச்சி

திருவண்ணாமலை ஈசான்ய மைதானம் அருகே நகர்புற நலவாழ்வு மையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில், கழிப்பறையில் கொடுக்கப்பட்டிருந்த மின்சார வயர் விலகியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு காணொலி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த ஒளிபரப்பு தடைப்பட்டது.

திருவண்ணாமலை: கழிப்பறை கட்டிடத்தில் இருந்து கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பின் வயர் விலகியதால், திருவண்ணாமலை நகர்புற நலவாழ்வு மைய திறப்பு விழாவின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த காணொலி காட்சியின் ஒளிபரப்பு தடைப்பட்டது.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, தேசிய சுகாதார குழுமம் சார்பில் திருவண்ணாமலை நகராட்சியில் போளூர் சாலையிலும் (ஈசான்ய மைதானம் அருகே), அண்ணாநகர், கீழ்நாத்தூர் மற்றும் ஆரணி நகராட்சி என திருவண்ணாமலை மாவட்டத்தில் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் நான்கு நகர்புற நலவாழ்வு மையங்களின் திறப்பு விழா இன்று (ஜுன் 7-ம் தேதி) மாலை நடைபெற்றது. சென்னையில் இருந்தபடியே, காணொலி காட்சி மூலமாக நான்கு நகர்புற நலவாழ்வு மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதற்கான நிகழ்ச்சி, திருவண்ணாமலை ஈசான்ய மைதானம் அருகே அமைக்கப்பட்ட நகர்புற நலவாழ்வு மையம் முன்பு நடைபெற்றது. இந்த கட்டிடத்துக்கு மின் இணைப்பு பெறவில்லை. இதனால், மையத்தின் அருகே உள்ள கழிப்பறை கட்டிடத்தில் இருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.

நகர்புற நலவாழ்வு மையத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது, கழிப்பறை கட்டிடத்தில் கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பில் இருந்து வயர் விலகியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றிய நிகழ்வு தடைப்பட்டது. பின்னர், அவசர அவசரமாக சென்று மின் இணைப்பு சரி செய்தனர். இதையடுத்து சில நிமிடங்கள் தடைப்பட்டிருந்த ஒளிபரப்பு மீண்டும் வழங்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு சரியான முறையில் மின் இணைப்பு கொடுக்காமல், கழிப்பறை கட்டிடத்தில் இருந்து தவறான முறையில் மின் இணைப்பை சுகாதாரத் துறையினர் கொடுத்துள்ள விவரம் தெரிந்ததும், நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, ஆட்சியர் பா.முருகேஷ் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். நகர்புற நலவாழ்வு மையத்தின் கட்டிடத்துக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை என்பதால், மாற்று ஏற்பாடாக ஜெனரேட்டரை பயன்படுத்தி மின்சாரம் பெற்றிருக்கலாம். முதல்வரின் நிகழ்ச்சியிலேயே, சுகாதார துறையினர் அலட்சியமாக இருந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, புதிதாக திறக்கப்படவுள்ள நகர்புற நலவாழ்வு மையங்களிலும் தலா ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு மருத்துவ பணியாளர் பணியில் இருப்பார்கள். காலை 8 மணி முதல் பகர் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x