Published : 06 Jun 2023 07:53 PM
Last Updated : 06 Jun 2023 07:53 PM

தமிழகத்தில் அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு இருக்கைகள் எண்ணிக்கை 62,464 ஆக உயர்வு

கோப்புப்படம்

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யும் இருக்கைகளின் எண்ணிக்கையை 51,046-லிருந்து நாளை (ஜூன் 7) முதல் 62,464 இருக்கைகள் வரை அதிகப்படுத்தி உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தொலைதூரப் பயணிகளின் வசதிக்காக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் பயணிகளின் பாதுகாப்பிற்கும் மற்றும் வசதியான பயணத்திற்காகவும் ஒரு மாதத்திற்கு முன் இருக்கைகளை இணையதளம் மற்றும் கைபேசி மூலம் முன்பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் தினசரி சுமார் 60,000 பயணிகளில் 20,000 பயணிகள் வரை முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வசதியினை அரசு பேருந்துகளில் 200 கி.மீ. தூரத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக விரிவு படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப்படுகிறது.

இதன் காரணமாக தற்போது ஒரு நாளைக்கான முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி 51,046 இருக்கைகளிலிருந்து 62,464 இருக்கைகள் வரை அதிகப்படுத்தி கூடுதல் பயணிகள் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது

இதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களிலிருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தை தவிர்த்து பிற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் முன்பதிவு செய்து பயணிக்க இயலும். மேலும், பயணிகள் வழக்கமாக பயன்படுத்தும் முன்பதிவு தளமான tnstc.in மற்றும் tnstc mobile app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த வசதி 07.06.2023 முதல் நடைமுறைப்படுத்தபடவுள்ளது’ என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x