Published : 06 Jun 2023 01:46 PM
Last Updated : 06 Jun 2023 01:46 PM
சென்னை: கடலூர் மாவட்டத்தில் சூறாவளி காற்றால் சேதமடைந்த வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு தொகையை விரைந்து வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
அதேபோல் கடலூர் மாவட்டம் ராமாபுரம், கீரப்பாளையம், ஒதியடிக்குப்பம், வெள்ளக்கரை, அரசடிக்குப்பம், வழிசோதனைப்பாளையம், அன்னவல்லி, வழுதலம்பட்டு, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் சுமார் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பூவன், ஏலக்கி, பேயன் உள்ளிட்ட வாழைகள் முறிந்து விழுந்தன. குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சேதமானதால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவு செய்த விவசாயிகளுக்கு தற்போது கடன் சுமை மேலும் அதிகரித்துள்ளது. கடன் சுமையில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க மழையால் சேதமடைந்த நெற் பயிர்களுக்கும், வாழைகளுக்கும் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உரிய இழப்பீடு தொகையினை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT