Published : 06 Jun 2023 11:48 AM
Last Updated : 06 Jun 2023 11:48 AM

பாதிக்கப்பட்ட கடலூர் வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் இழப்பீடு வழங்குக: ராமதாஸ்

ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த வாழைப் பயிர்களை கணக்கிட அதிகாரிகள் குழுவை அனுப்பி, இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை வீசிய திடீர் சூறைக்காற்று மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ராமாபுரம், ஒதியடி குப்பம், கீரப்பாளையம், வழி சோதனை பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1000 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பூவன், ஏலக்கி, மொந்தன், பேயன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழை மரங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அடியோடு சாய்ந்து விட்டன. அதனால் உழவர்கள் ஒட்டுமொத்த முதலீட்டையும் இழந்து கண்ணீர் சிந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

சூறைக் காற்றில் சேதமடைந்த வாழைப் பயிர்கள் அனைத்தும் ஆடி மாதத்தில் அறுவடை செய்யும் நோக்கத்துடன் சாகுபடி செய்யப்பட்டவை ஆகும். அவை அனைத்தும் குலை தள்ளி அடுத்த மாதத்தில் அறுவடை செய்வதற்கு தயாராக இருந்தவை. ஆயிரம் ஏக்கரில் 5 லட்சம் வாழை மரங்கள் சாய்ந்து விட்டன. அவற்றுக்காக செய்யப்பட்ட முதலீடு அனைத்தும் வீணாகி விட்டது. சேதமடைந்த வாழைப் பயிர்களின் மதிப்பு மட்டும் ரூ.25 கோடிக்கும் அதிகம் என்று உழவர்களால் கூறப்படுகிறது.

ஜூன் மாதத்தில் இப்படி ஒரு சூறைக்காற்று வீசும் என்பதை எந்த உழவரும் எதிர்பார்க்கவில்லை. 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே வீசிய சூறைக் காற்றில் 1000 ஏக்கரில் வாழைப் பயிர்கள் நாசமாகும் என்பதையும் எவரும் எதிர்பார்க்கவில்லை. திட்டமிட்டபடி அறுவடை நடந்தால், சாகுபடிக்காக வாங்கிய கடன்களை அடைத்து விட்டு, லட்சக் கணக்கில் லாபம் ஈட்டலாம் என்ற நேற்று வரை நினைத்துக் கொண்டிருந்த உழவர்கள், இன்று லட்சக் கணக்கில் வாங்கிய கடன்களை எவ்வாறு அடைக்கப்போகிறோம் என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர். அவர்களின் கவலையைப் போக்கி, கண்ணீரைத் துடைக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.

கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த வாழைப் பயிர்களை அதிகாரிகள் குழுவை அனுப்பி கணக்கீடு செய்ய தமிழக அரசு ஆணையிட வேண்டும். சாகுபடிக்காக செய்த மனித உழைப்பு தவிர்த்த பிற செலவை மட்டுமாவது ஈடுகட்டும் வகையில் ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதன் மூலம் உழவர்களின் துயரைத் துடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x