Published : 06 Jun 2023 09:12 AM
Last Updated : 06 Jun 2023 09:12 AM
சென்னை: ஆசிரியர்களுக்கான சம்பளத்தை உடனுக்குடன் வழங்கவும், காலிப் பணியிடங்களை நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற நோக்கத்தின் அடிப்படையில், சேவை மனப்பான்மையுடன் தங்கள் தொழிலை சீரிய முறையில் மேற்கொண்டு வருபவர்கள் ஆசிரியர்கள். சமூக சேவை செய்வதற்கு சிறந்த வழி ஆசிரியராகப் பணியாற்றுவதுதான். கண்ணியமான தொழில்களில் ஒன்றாக ஆசிரியர் பணி விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. எண்ணும் எழுத்துமாகிய இரண்டும் மக்களுக்குக் கண் போன்றது என்ற வள்ளுவரின் வாய்மொழிக் கேற்ப கல்விக் கண்ணை மாணவ, மாணவியருக்கு அளிக்கும் பணியை மேற்கொண்டு வருபவர்கள் ஆசிரியர்கள்.
இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த ஆசிரியர்களை இழிவாகப் பேசுவது, அவர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பது, அதையும் உரிய நேரத்தில் கொடுக்காதது, கூடுதல் பளுவினை அவர்களுக்கு அளிப்பது, காலிப் பணியிடங்களை நிரப்பாதது போன்ற அவல நிலை தான் கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டு இறுதியில், நிர்வாக முறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் மற்றும் நிதிப் பரிமாற்றம் உள்ளிட்ட நடைமுறைகள் முழுமையாக நிறைவு பெறாததன் காரணமாக அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வந்த லட்சணக் கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு மூன்று, நான்கு மாதங்களுக்கான சம்பளம் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை.
இந்தப் பிரச்சனை சற்று ஓய்ந்த நிலையில், தற்போது அரசுப் பள்ளிகளில் மாதம் 15,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை என்ற புகார் தற்போது வந்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கடந்த மார்ச் மாதத்திலிருந்தே சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. சம்பளத்தைக்கூட உரிய நேரத்தில் வழங்க முடியாத திறமையற்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பள்ளிக் கல்வித்துறை என்பதே பற்றாக்குறை துறையாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
பள்ளிக் கல்வித் துறைக்கு தலைவரே இல்லாத நிலை நீடித்த நிலையில், நேற்றுதான் இயக்குநர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது தவிர, முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன. ஒவ்வொரு அதிகாரிக்கும் கூடுதல் பொறுப்பு தரப்பட்டு இருக்கிறது. இன்றைய நிலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 670 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், உயர்நிலைப் பள்ளிகளில் 435 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், நடுநிலைப் பள்ளிகளில் 1,003 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், தொடக்கப் பள்ளிகளில் 1,235 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பள்ளிகளில் எல்லாம் மூத்த ஆசிரியர்கள்தான் தலைமை ஆசிரியர் பொறுப்பை வகிக்கின்றனர். இவ்வாறு கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்படுவதன் காரணமாக, மாணவ, மாணவியருக்கு சரியாக பாடங்களை பயிற்றுவிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலையில் பாதிக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதே நிலைமைதான் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களிலும் நீடிக்கிறது. இதன் காரணமாக, ஆசிரியர்களுக்கான சம்பளம், நிலுவைத் தொகை, வருங்கால வைப்பு நிதி முன்பணம், ஓய்வூதியப் பயன்கள் என அனைத்திலும் தாமதம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
மொத்தத்தில், பள்ளிக் கல்வித் துறையில் அவல நிலை அதிகரித்துக் கொண்டே செல்வது வேதனை அளிக்கும் செயலாகும். ஒருவேளை இதுதான் 'திராவிட மாடல்' அரசு போலும் ! இவ்வாறு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில், மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பால் அடித்த காலம் போய், ஆசிரியர்களை மாணவர்கள் பிரம்பால் அடிக்கும் காலம் வந்துவிட்டது; இதனை ஆசிரியர்கள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்று ஓர் உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. அதாவது, ஆசிரியர்கள் அடியை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று பேசுகிறார்.
இந்தக் கூற்று இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. கல்வியோடு ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கக்கூடியவர்கள் ஆசிரியர்கள். ஒழுக்கம் ஒருவனுக்கு மிகப் பெரிய சிறப்பைத் தருவதால் ஒழுக்கம் உயிரைக் காட்டிலும் மேலானது என்கிறார் திருவள்ளுவர். ஆனால், உயர் கல்வித் துறை அமைச்சரோ ஒழுக்கமற்ற செயலை போதிக்கிறார். ஓர் அமைச்சரே ஒழுக்கமற்ற செயலை செய்யத் தூண்டுவது வெட்கக் கேடான செயல். சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும், மாறாப் பற்றும் கொண்டிருப்பேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்ட ஓர் அமைச்சர், இதுபோல் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது.
இது போன்ற பேச்சு ஒழுக்கமற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்குச் சமம். பள்ளிக் கல்வித்துறையில் நிலவி வரும் குளறுபடிகளை உடனடியாக களையும் வகையில், ஆசிரியர்களுக்கான சம்பளத்தை உடனுக்குடன் வழங்கவும், காலிப் பணியிடங்களை அவ்வப்போது நிரப்பவும், பதவி உயர்வுகளை உடனுக்குடன் வழங்கவும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நடந்து கொள்ளுமாறு உயர் கல்வித்துறை அமைச்சருக்கு அறிவுரை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT