Published : 06 Jun 2023 05:55 AM
Last Updated : 06 Jun 2023 05:55 AM
உதகை: நவீன காலத்தில் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால், கல்வி முறைகளையும் மாற்றி அமைப்பது அவசியம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.
‘உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது’ என்ற தலைப்பில், உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. முதலில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மாநாட்டை தொடங்கிவைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: தொழில் புரட்சி ஏற்பட்டபோது, வேலை ஆட்களின் தேவை அதிகரித்து காணப்பட்டது. 2-ம் உலகப்போருக்குப் பின்னர் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தது. கணினி தேவை அதிகரித்ததால், கணினி கல்வி கற்க அவசியம் ஏற்பட்டது.
தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் வளர்ந்ததால், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு படையெடுத்தன. கால மாற்றத்துக்கேற்ப கல்வியிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நவீன காலத்தில் செயற்கைநுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால், அதற்கேற்ப கல்வி முறைகளையும் மாற்றிஅமைக்க வேண்டியது அவசியம்.
தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கியது. இன்றைய கால கட்டத்தில் இளைஞர்களுக்கு படிப்புக்கேற்ற வேலை கிடைப்பதில்லை. அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர் கல்விக்கும் தமிழகத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்களுக்கு பொறியியல் பட்டதாரிகளைவிட நல்ல வேலை கிடைக்கிறது. கிடைத்த வேலையை, குறைந்த ஊதியத்தில் பொறியியல் மாணவர்கள் செய்து வருகின்றனர். இளைஞர்களுக்கு காலத்துக்கேற்ற கல்வி கிடைக்காததால் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில மற்றும் தேசிய வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. எனவே, கல்வியில் மாற்றம் அவசியம். தேசிய கல்விக் கொள்கையில், இளைஞர்களின் திறனுக்கேற்ற கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.
சீனா, ஜப்பான் நாடுகளில் தாய்மொழியில்தான் படிக்கிறார்கள். ஆனால், இளைஞர்களிடையே ஆங்கில மோகம் அதிகரித்துள்ளதால் அதற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். ஆங்கில மோகத்தில் இருந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விடுபட வேண்டும். தாய்மொழியில் கற்பதை அதிகரிக்க வேண்டும். திறன்வாய்ந்த மனித வளத்தை உருவாக்கினால் மட்டுமே, அந்நிய முதலீடுகளை கவர முடியும்.
பிற மாநிலங்கள் தமிழ்நாட்டுடன்போட்டி போடும் அளவுக்கு முன்னேறியுள்ளன. இதனால் தமிழ்நாட்டு கல்வி முறை காலத்துக்கேற்ப மாற்றம் பெற்று, இளைஞர்களின் திறனில் மேம்பாடு அடையச் செய்ய வேண்டும். பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும். எனவே, சிறந்த கல்வி மற்றும்திறன் வாய்ந்த இளைஞர்களை உருவாக்க தமிழகத்திலுள்ள அரசுமற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் எம்.ஜெகதேஷ் குமார், ஆன்லைன் மூலமாக உரையாற்றினார். பாரதிய பாஷா சமிதிதலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி, லக்னோ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அலோக் குமார்ராய், இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் தலைவர் நாகேஸ்வர ராவ், அனுவாதினி, மொழிபெயர்ப்பு கருவி நிறுவனர் புத்தா சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT