Published : 01 Oct 2017 10:42 AM
Last Updated : 01 Oct 2017 10:42 AM

வெகுவாகக் குறைந்த நிலத்தடி நீர்மட்டம்: குறிச்சிக் குளத்தின் நீர்வழிப் பாதை பாதுகாக்கப்படுமா?

கோவை குறிச்சி குளத்தின் நீர்வழிப் பாதையை பாதுகாத்து, ஏறத்தாழ 1,000 அடிக்கும் கீழே சென்றுவிட்ட நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மதுக்கரை வட்டம் குறிச்சி கிராமத்தில், சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன் கொங்கு சோழர்களால் உருவாக்கப்பட்டது குறிச்சி குளம். மொத்தம் 372 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த குளம், ஆக்கிரமிப்புகளால் தற்போது 300 ஏக்கருக்கும் கீழே குறைந்துவிட்டது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் இந்தக் குளத்தில் தண்ணீர் நிரம்பி, 1,000 முதல் 1,500 ஏக்கர் வரை நேரடிப் பாசனம் நடைபெற்றுள்ளது. பின்னர் போதுமான தண்ணீர் இல்லாததால் நேரடிப் பாசனம் வெகுவாகக் குறைந்துவிட்டது. எனினும், இந்தக் குளத்தின் நீரால், சுமார் 35 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள குறிச்சி, குனியமுத்தூர், போத்தனூர், மலுமிச்சம்பட்டி, சுந்தராபுரம், ஒத்தக்கால்மண்டபம், மதுக்கரை, எட்டிமடை, கிணத்துக்கடவு, செட்டிப்பாளையம், வடசித்தூர் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும், குளத்துக்கு அருகில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, குறிச்சி பகுதிக்கு தண்ணீர் விநியோகம் செய்வார்கள்.

ஆனால், சில ஆண்டுகளாக குளத்தில் தண்ணீர் இல்லாததால், இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. மதுக்கரை, கிணத்துக்கடவு, செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 1,000 அடிக்கும் கீழே நிலத்தடி நீர்மட்டம் சென்றது. இந்த நிலையில், குளத்துக்கு தண்ணீர் வரும் பாதையில், ஆக்கிரமிப்பு மற்றும் சாலை அமைத்தல் உள்ளிட்டவற்றால், தண்ணீர் வருவது வெகுவாகக் குறைந்துவிட்டதாக புகார்கள் எழுந்தன.

இது குறித்து குறிச்சி நகராட்சி முன்னாள் தலைவர் நா.பிரபாகரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: 01cbrkk_prabaharan நா.பிரபாகரன்

குறிச்சி குளத்தின் தண்ணீர், லட்சக்கணக்கான மக்களுக்கு நீராதாரமாக உள்ளது. இந்தக் குளத்தில் தண்ணீர் நிரம்பினால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, சுற்றியுள்ள கிராம விவசாயிகளும், குறிச்சி பகுதி மக்களும் பயனடைவர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குளத்துக்கு தண்ணீர் வரும் நேரத்தில், பாலம் பணி நடைபெறுவதாகக் கூறி, தண்ணீர் வரும் வாய்க்காலை அடைத்தனர். இதனால் குளத்துக்கு தண்ணீர் வருவது நிறுத்தப்பட்டது. இதேபோல, சில நாட்களுக்கும் முன்பும் நீர்வரும் பாதையில் தடங்கல் ஏற்பட்டது.

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குறிச்சி அணைக்கட்டில் இருந்து குளத்துக்கு அதிக அளவில் தண்ணீர் வரும் என்று நம்பியிருந்தோம்.

இந்த நிலையில், புட்டுவிக்கி பாலம் அருகே, தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. நீர்வழிப் பாதையில் நடைபெற்ற பணி காரணமாக, குளத்துக்கு தண்ணீர் வருவது பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆட்சியர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டோம். நீர்வழிப் பாதையை ஒரளவுக்கு திறந்துவிட்டனர். எனினும், குறிச்சி குளத்துக்கு போதுமான அளவு தண்ணீர் வரவில்லை.

நொய்யல் ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக, குளத்துக்கு முழுமையாக தண்ணீர் வந்திருந்தால், குளம் பாதிக்கு மேல் நிரம்பியிருக்கும். இதனால், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்திருக்கும். தண்ணீர்ப் பிரச்சினையால் தவிக்கும் குறிச்சி உள்ளிட்ட பகுதி மக்களின் வேதனையை, ஓரளவுக்கு தீர்த்திருக்க முடியும்.

நீர்வழிப் பாதையை பாதிக்கும் வகையில் எவ்விதப் பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும், குளத்தின் நீர்வழிப் பாதையில் தடை ஏற்படும் வகையில் சாலைப் பணிகளை மேற்கொள்வது சரியல்ல. இனியாவது குளத்தில் தண்ணீர் தேங்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்க துணைச் செயலர் வானவில் கனகராஜ் கூறியதாவது: புட்டுவிக்கி பாலப் பகுதியில் உள்ள மண் பாதையை, தார் சாலையாக மாற்றும் பணியால், குளத்துக்கு தண்ணீர் வருவது தடைபட்டது. சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட மண், குளத்தின் வாய்க்கால் பகுதியில் கொட்டப்பட்டதால், தண்ணீர் செல்லும் பாதை குறுகியது.

மழைக் காலத்தில், குளத்துக்கு தண்ணீர்வரும்போது இதுபோன்ற பணிகளை மேற்கொள்வது தவறானது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமான குறிச்சி குளத்தின் நீர்வழிப் பாதையைப் பாதுகாப்பதுடன், குளத்தைச் சுற்றி நடைபாதை, பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குனியமுத்தூர் பகுதி கழிவுநீரை குளத்தில் கொட்டுவதை தடுக்க வேண்டும். கழிவுநீர் சேர்ந்தால் குளத்தில் ஆகாயத்தாமரைகள் அதிகம் படர்ந்து, நீரை உறிஞ்சிவிடும்.

பல்வேறு அமைப்புகள், தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோர் குறிச்சி குளத்தின் பராமரிப்பு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் சூழலில், அரசும், உள்ளாட்சி நிர்வாகமும்கூட குளத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x