Published : 06 Jun 2023 06:45 AM
Last Updated : 06 Jun 2023 06:45 AM
ஈரோடு: ஈரோட்டில் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட நிர்வாகம் கட்டணம் நிர்ணயம் செய்ய முன் வர வேண்டும், என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஞ்சள், ஜவுளி வணிகத்திற்கு பெயர்பெற்ற ஈரோடு நகருக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஈரோடு மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருந்து மருத்துவம், கல்வி, வணிகம் உள்ளிட்ட தேவைக்காகவும் பலரும் நகரப் பகுதிக்கு வந்து செல்கின்றனர். ஈரோடு மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், பயணத்திற்கான முக்கியத் தேவையாக ஆட்டோக்கள் அமைந்துள்ளன.
ஈரோட்டில் ஆட்டோக்களின் இயக்கத்திற்கு கட்டணம் வரையறுக்கப்படாததால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆட்டோ ஓட்டுநர்கள் அபரிமிதமான கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பெரியார் நகரைச் சேர்ந்த சதீஷ் கூறியதாவது: ஈரோடு ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர். ரயில் நிலையத்தில் இருந்து முக்கிய பகுதிகளுக்குச் செல்ல, இரு மடங்கு கட்டணத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் கேட்கின்றனர். குறிப்பாக, ஒரு ஓட்டுநர் ஒரு கட்டணத்தை சொல்லி விட்டால், மற்ற ஆட்டோ ஓட்டுநர்களும் அதே கட்டணம் தான் எனக் கூறி பயணிகளை தவிக்க விடுகின்றனர்.
காலை நேரங்களில் ரயில் நிலைய ஆட்டோ நிறுத்துமிடத்தில் தினமும் பயணிகள் வாக்குவாதம் செய்யும் நிலை தொடர்கிறது. எனவே, ஈரோடு ரயில் நிலையத்தில், முன்கூட்டியே கட்டணம் செலுத்தி (ப்ரீ பெய்டு முறை) ஆட்டோவில் பயணிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
அதே நேரத்தில், ஈரோடு பேருந்து நிலைய ஆட்டோ நிறுத்தத்தில் ஓரளவு சரியான கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் தெரிவித்தனர். ஈரோடு அரசு மருத்துவமனை, பன்னீர்செல்வம் பூங்கா உள்ளிட்ட பிரதான பகுதிகளிலும் ஆட்டோக்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கால் டாக்சிகளுக்கு வரவேற்பு: ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதன் எதிரொலியாக, ஈரோட்டில் ‘கால் டாக்சி’களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. பேரம் பேசாமல் குறிப்பிட்ட இடத்திற்கு பயணிக்க ‘கால் டாக்சி’ சிறந்தது என்ற எண்ணம் பயணிகளிடம் ஏற்பட்டுள்ளது. ஆட்டோ தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு, இந்த மாற்றம், பாதகத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்பிரமணியன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 3,200 வாடகை ஆட்டோக்கள் பதிவு செய்யப்பட்டு இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் அதிகம் விரும்பும் பொதுப்போக்குவரத்து வாகனமாக ஆட்டோக்கள் விளங்குகின்றன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஆட்டோக்களில் மீட்டர் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கில், ‘அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், தொழிற்சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள் ஒன்று கூடி பேசி, மாவட்ட அளவில் கட்டணம் நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்’ என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே, ஈரோட்டிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இது போன்ற கூட்டம் நடத்தி, ஆட்டோக்களுக்கான கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும். ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற பொதுவான குற்றச்சாட்டைத் தவிர்த்து, பெட்ரோல் விலை, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகம் கட்டணம் நிர்ணயம் செய்யுமானால், அதை பின்பற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT