Published : 23 Oct 2017 09:47 AM
Last Updated : 23 Oct 2017 09:47 AM
அடையாறு ஆற்றைப் பாதுகாக்கும் பணிகளுக்காக, ரூ.555.46 கோடி செலவில் பல துறைகள் இணைந்து, திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியில் இறங்கியுள்ளன.
அடையாறு ஆறு வண்டலூர் அடுத்த, ஆதனூர் கிராமத்தில் தொடங்குகிறது. மொத்தம், 42 கி.மீ., தூரம் கொண்ட இந்த ஆறு, பெருங்களத்தூர், திருநீர்மலை, அனகாபுத்தூர், பொழிச்சலூர், நந்தம்பாக்கம், சைதாப்பேட்டை பகுதிகள் வழியாக, பட்டினப்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது.
ஆக்கிரமிப்புகள், தொழிற்சாலைகள் கழிவுநீர், குப்பை மற்றும் கரை உடைப்பு என, பல்வேறு வழிகளில் ஆறு தன்னுடைய அடையாளத்தை இழந்து, கழிவுநீர் ஆறாக நாசப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த, 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர், அடையாற்றை இருக்கும் இடம் தெரியாமல் சின்னாபின்னமாக்கியது. பிறகு பொதுப்பணித்துறை சார்பில், ரூ.19 கோடி மதிப்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றி, ஓரளவு தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டது.
பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாக, ஆறுகளின் பழைய அடையாளத்தை மீட்க அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக விரிவான திட்டம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட சென்னை நதிகள் பாதுகாப்பு அறக்கட்டளை, அரசுக்கு விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்தது. இதில் தற்காலிகச் சீரமைப்பு, நிரந்தரச் சீரமைப்பு என மூன்று திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் தற்காலிகச் சீரமைப்பாக, அடையாறு ஆற்றின் பழைய அடையாளத்தை மீட்க, ரூ.555.46 கோடிக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, குடிநீர் வாரியம், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட துறைகள் இணைந்து, இந்தப் பணிகளை மேற்கொள்ளவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆற்றோரங்களில் ஆங்காங்கே நீரூற்றுடன் கூடிய பசுமை பூங்கா அமைத்தல், அதிகளவில் மரங்கள் நடுதல், பொதுமக்கள் பொழுது போக்க நடைபாதை, இருக்கைகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தல், ஆற்றின் இருபக்கமும் சுற்றுச்சுவர் அமைத்தல், கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதோடு அதனைச் சுத்திகரித்து ஆற்றில் விடுதல், ஆக்கிரமிப்புகளை அகற்றி மாற்று இடம் வழங்கல், உள்ளிட்ட பல்வேறு பணிகள் இந்தத் தற்காலிகத் திட்டத்தில் அடங்கும்.
பெருங்களத்தூர், குன்றத்தூர், திருநீர்மலை பேரூராட்சிகளின் எல்லைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சுற்றுச்சுவர் பூங்கா அமைக்க, 36 கோடியே 29 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதே போல் பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிப் பகுதிப் பணிகளுக்கு ரூ.57 கோடியே, 39 லட்சத்தில் மதிப்பீடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது மட்டுமின்றிக் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.71 கோடியே 89 லட்சமும், பொதுப்பணித்துறைக்கு ரூ.104.31 கோடியும், சென்னை மாநகராட்சிக்கு, 151.03 கோடியும், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்திற்கு, ரூ125.05 கோடியும், சென்னை நதிகள் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு, ரூ.4.06 கோடியும் ஆக, மொத்தம் ரூ.555.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, நகராட்சிப் பொறியாளர் ஒருவர் கூறியதாவது: அடையாறு ஆற்றின் பழைய அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக அரசு மூன்று திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. தற்போது முதல் கட்டமாக தற்காலிக சீரமைப்பு மேற்கொள்ளவே ரூ.555.46 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் மேற்கொள்ளவுள்ள துறைகள் தங்கள் துறை சார்பில் எந்தெந்தப் பணிகள் மேற்கொள்ள வேண்டும், அதற்கான செலவினம் குறித்த திட்ட அறிக்கையை தயாரிக்கின்றனர். அனைத்து துறைகள் சார்பிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆற்றில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்பட்டாலே, தண்ணீர் சுத்தமாவதோடு நிலத்தடி நீர்மட்டம் உயரும். அடையாறு தன் பழைய அடையாளத்தை அடையும் காலம் வெகு தொலைவில் இல்லை. அரசியல் தலையீடு இல்லாமல் திட்டம் முறையாக நிறைவேறினால், ஆற்றில் நன்னீர் மட்டுமே ஓடும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT