Published : 22 Jul 2014 10:00 AM
Last Updated : 22 Jul 2014 10:00 AM
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் அருகில், அதற்கான தெளிவுரையை எழுத உத்தரவிடுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க, அரசு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக் குடியைச் சேர்ந்த டி.கருப்பையா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:
உலகின் மிகப் பழமையான மொழிகளில் தமிழும் ஒன்று. தமிழில் எண்ணற்ற புராணங்களும் இதிகாசங்களும் படைக்கப்பட்டுள்ளன. திருக்குறள் பொதுவானதாகவும், உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூலாகவும் உள்ளது. பைபிள், திருக்குர் ஆன் மறையுரைகளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடையது திருக்குறள். இந்நூலில் உலகியல் வாழ்வுக்கு தேவையான அனைத்து அறிவுரைகளும் கூறப்பட் டுள்ளன.
சிறப்புமிக்க திருக்குறள், தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும், அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் எழுதப்பட்டுள்ளது. திருக்குறளின் அர்த்தத்தை, தமிழில் புலமை பெற்றவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். மற்றவர்களுக்கு குறளின் அர்த்தம் தெரிவதில் சிரமம் உள்ளது.
எனவே, அரசு அலுவலகங்கள், பேருந்துகளில் எழுதப்பட்டுள்ள திருக்குறளின் தெளிவுரையை, அந்தந்த குறளின் அருகில் எழுத உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம். ஜெய்சந்திரன், ஆர். மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். மனு குறித்து அரசிடம் போதிய விளக்கம் பெற்று நீதிமன்றத்துக்கு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT