Published : 06 Jun 2023 06:12 AM
Last Updated : 06 Jun 2023 06:12 AM
வேலூர்: வேலூர் மாநகரின் சிறந்த பொழுதுபோக்கு தலமாக வேலூர் கோட்டை இருந்து வருகிறது. இங்குள்ள கோட்டை மதில் சுவர், ஜலகண்டேஸ்வரர் கோயில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கிறிஸ்தவ வழிபாட்டு தலம், மத்திய, மாநில அரசுகளின் அருங்காட்சியகங்களுக்கு வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தினசரி வந்து செல்கின்றனர். அதைத்தாண்டி பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா இல்லை என்பது நீண்ட நாள் குறையாக இருந்து வருகிறது.
வேலூர் கோட்டையின் தெற்கு பகுதியில் இருந்த பூங்கா பயன்பாடு இல்லாமல் இருக்கும் நிலையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் பெரிய பூங்காவாக ஓட்டேரி சிறுவர் பூங்கா இருந்து வருகிறது. ஏறக்குறைய ரூ.1.40 கோடி மதிப்பிலான உருவாக்கப்பட்ட பூங்காவின் நிலை இன்று பார்ப்பதற்கே பரிதாப நிலையில் உள்ளது. இந்த பூங்கா அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கு உள்ளடங்கியது. வேலூர் மாநகராட்சியின் 53-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் இந்த பூங்கா ஓட்டேரி ஏரிக்கரையில் சுமார் 800 மீட்டருக்கும் அதிகமான நீளத்துடன் கூடிய வெறும் காட்சிப் பொருளாக இருந்து வருகிறது.
கண்காணிப்பு கேமராக்கள் வசதியுடன் கூடிய இடம் என குறிப்பிடப்பட்டிருக்கும் நுழைவு வாயில் தொடங்கி, பூங்காவை சுற்றிவந்தால் குறிப்பிடும் அளவுக்கு பராமரிப்பு இல்லாமல் உள்ளது. பூங்காவின் நடைபாதைகள் பெயரளவுக்கு பராமரிக்கப்படுகிறது.
இரண்டு இடங்களில் இருக்கும் செயற்கை நீருட்டு மாடங்கள் தண்ணீர் இல்லாமல் புதர்கள் மண்டியுள்ளன. சிறுவர்களுக்கான பூங்கா பகுதியில் உள்ள சறுக்கு மரம் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சேதமடைந்து காணப்படுகின்றன. கூடைப்பந்து மைதானம் பார்ப்பதற்கு அழகாக இருந்தலும் விளையாட முடியாத நிலையில் உள்ளது.
சமூக விரோதிகள் நடமாட்டம்: பகல் நேரத்தில் பூங்காவில் இருக்கும் இருக்கைகள் அனைத்தும் கல்லூரி காதலர்களால் நிரம்பி இருக்கிறது. ஓட்டேரி ஏரியின் கரை மீது அமைக்கப்பட்ட நடைபாதை மற்றும் பார்வையாளர் மாடத்தில் இருந்து ஓட்டேரி ஏரியின் அழகை ரசிக்க முடியாமல் புதர் மண்டிக்கிடக்கிறது.
ஏரிக்கரையின் கீழ் பகுதியில் இருக்கும் பூங்கா நடைபாதையைக் காட்டிலும் கரை மீதுள்ள நடைபாதை பகுதி சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. கஞ்சா புகைப்பவர்கள், மதுபானம் அருந்துபவர்கள் என பூங்காவுக்குள் அத்துமீறி நுழைந்து வருபவர்களை தடுக்க முடியாத நிலை உள்ளது.
குடிக்க தண்ணீர் இல்லை: பூங்காவுக்கு முக்கியமாக இருக்க வேண்டிய தண்ணீர் வசதி இல்லவே இல்லை. இரண்டு ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் அங்குள்ள கழிப்பறைகள் பூட்டியே கிடக்கின்றன. உள்ளே சென்று பார்த்தால் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக இருக்கிறது. பூங்காவுக்கு வருபவர்களுக்கு குடிப்பதற்குக்கூட பொதுக்குழாய் வசதி இல்லை என்பது அனைவரின் கவலையாக உள்ளது. பூங்காவை சீரமைக்க ஆய்வு நடத்தப்பட்டு பல மாதங்கள் ஆகியும் எந்த வேலையும் நடைபெற்றதாக தெரியவில்லை.
இதுகுறித்து, பூங்கா காவலரிடம் விசாரித்தபோது, ‘‘பூங்கா நுழைவு கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 500 ரூபாய் வருமானம் உள்ளது. வார இறுதி நாட்களில் 2 ஆயிரம் ரூபாய் வரைவருகிறது. காசு கொடுக்காமல் செல்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களை கேட்க முடிவதில்லை. பூங்காவில் தண்ணீர் வசதி இல்லாமல் நாங்களே அவதிப்படுகிறோம். குடிப்பதற்கு தண்ணீர் கூட வெளியில் இருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
ஓட்டேரி பூங்காவின் மோசமான நிலை குறித்து 53-வது வார்டு பாமக கவுன்சிலர் பாபி கதிரவனிடம் கேட்டதற்கு, ‘‘மாநகராட்சி மேயர், ஆணையர், கலெக்டர், தமிழக முதல்வர் வரை கடிதம் அனுப்பி இருக்கிறேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை. பூங்காவுக்கு அருகில் இருக்கும் குப்பைக் கிடங்கை முதலில் இடமாற்றம் செய்ய வேண்டும். பூங்கா காவலாளிக்கே ஒரு நாளைக்கு இரண்டு தண்ணீர் கேன்களை நான்தான் கொடுத்தனுப்புகிறேன்.
பூங்காவில் இருக்கும் கழிப்பறைகளை சீரமைக்க எப்படியும் 5 லட்சம் ரூபாய் ஆகும். அந்தளவுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நடைபாதையை சீரமைத்துக் கொடுத்தால் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பூங்காவை சீரமைக்க எம்எல்ஏவும், மேயரும் பார்த்து விட்டுச் சென்றார்கள். ஆனால், வேலை மட்டும் நடக்கவில்லை. கூடைப்பந்து வளையம் தயாராகிவிட்டது. வெல்டிங் வைத்தால் தான் பயன்படுத்த முடியும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT