Published : 28 Oct 2017 09:01 AM
Last Updated : 28 Oct 2017 09:01 AM
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை அமையவிருக்கும் முயற்சிக்காக ரூ.10 கோடி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தனது மொழிப் பற்றைக் காட்டி, ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்குச் செலுத்தவேண்டிய நிதியில் பெரும் சுமையைக் குறைத்துள்ள தமிழக அரசு, இதன் வாயிலாக, தமிழுக்கு மகுடம் சூட்டியிருக்கிறது.
உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறது 350 ஆண்டுகள் பழமையான ஹார்வர்டு பல்கலைக்கழகம். அதில் 2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த தமிழ் மொழிக்கு இருக்கை அமைக்கும் முயற்சி கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ‘ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு’ (Harvard Tamil chair Inc) முன்னெடுத்த இந்த முயற்சியை உலகறியச் செய்யும் பணியை நமது ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் செய்து வருகிறது. ஹார்வர்டில் இருக்கை அமைக்க அந்தப் பல்கலைக்கழகத்துக்குச் செலுத்தவேண்டிய மொத்த ஆதார நிதி ரூ.39 கோடி. இதில் ரூ.9.75 கோடியை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதை தமிழ் அறிஞர்களும், ஆர்வலர்களும் வரவேற்றுக் கொண்டாடி வருகின்றனர்.
முன்வந்த இருவர்
தமிழுக்கு இருக்கை அமைக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்ததும், அதற்குத் தேவையான மொத்த ஆதார நிதியான ரூ.39 கோடியில் ரூ.6 கோடியை (1 மில்லியன் அமெரிக்க டாலர்) அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழக மருத்துவர்களான ஜானகிராமன், திருஞானசம்பந்தம் ஆகிய இருவரும் நன்கொடையாக அளித்தனர். இவர்களைத் தொடர்ந்து, கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கம், தமிழகப் பேராசிரியர் மு.ஆறுமுகம், தொழிலதிபர் பால்.பாண்டியன் உள்ளிட்டோர் அடுத்தகட்ட நன்கொடைகள் அளித்தனர்.
கைகொடுக்கும் ‘தி இந்து’
தமிழுக்கு இருக்கை அமைக்கும் முயற்சியில் தொடக்கம் முதலே இவர்களுடன் இணைந்த ‘தி இந்து’ தமிழ் நாளிதழ், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையவிருப்பதை தமிழகம் முழுவதும் நடத்திய வாசகர் திருவிழா நிகழ்ச்சிகளில் அறிவித்தது. தமிழ் இருக்கையின் அவசியத்தை வலியுறுத்தி தொடர் கட்டுரைகள், செய்திகளை வெளியிட்டதோடு, வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடைகளை அளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தது. சென்னையில் நடந்த ‘தி இந்து’ வாசகர் திருவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நீதியரசர் கிருபாகரன், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் ஹார்வர்டு தமிழ் இருக்கையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினர். இதையடுத்து, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் ‘எங்கள் அரசு அமைந்தால், ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைய உதவும்’ என்று குறிப்பிட்டது. அந்தத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக தமிழக அரசு தற்போது ரூ.10 கோடி வழங்கியிருப்பது தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ‘ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு’ இயக்குநர்களில் ஒருவரும், அதன் இந்திய ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் மு.ஆறுமுகம் நம்மிடம் கூறியதாவது:
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சமஸ்கிருத மொழிக்கான இருக்கை வழியே யோகக் கலை ஆய்வு செய்யப்பட்டு, ‘உடல், மனம் ஆகிய இரண்டின் ஆரோக்கியத்துக்கும் அரணாக யோகா விளங்குகிறது’ என்ற ஆய்வு முடிவுகள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டன. அதன்பிறகே யோகக் கலையை மொத்த உலகமும் எடுத்துக்கொண்டு அதனால் பயனடைந்து வருகின்றன. அதேபோல, ஹார்வர்டு தமிழ் இருக்கை மூலம் நமது மொழிக்கு மட்டுமல்லாது, நமது சித்த மருத்துவத்துக்கும் மாபெரும் அங்கீகாரம் கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இப்படியொரு சூழலில், தமிழக அரசு ரூ.10 கோடி அளித்திருப்பது, தமிழ் இருக்கை அமைப்பதில் பெரும் நகர்வை நோக்கி முன்னேறியுள்ளது. இதற்காகத் தமிழக முதல்வருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இதுதொடர்பாக அவரைச் சந்தித்தபோதெல்லாம் இன்முகத்துடன் கோரிக்கையை பரிசீலித்து, தற்போது தொகைக்கான காசோலையை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
எங்களுடன் தொடக்கம் முதலே இணைந்து, ஹார்வடு தமிழ் இருக்கை குறித்த விழிப்புணர்வை தொடர் கட்டுரைகள் மூலமும், நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டும் ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு ‘தி இந்து’ நாளிதழ் தனது இணையதளம் வழியாக இணைப்பை வழங்கியது. இதன்மூலம் டிஜிட்டல் வழியில் ஆன்லைனில் நன்கொடை செலுத்த தனது வாசகர்களை ஊக்கப்படுத்தியது. அதோடு, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ‘ஹார்வர்டு தமிழ் இருக்கை’ குறித்த அறிவிப்பு இடம்பெறவும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் காரணமாக இருந்தது.
அதே நேரம், இருக்கை அமைய இன்னும் ரூ.9 கோடி தேவை என்பதை தமிழர்களாகிய நாம் மறந்துவிடக் கூடாது. அனைவரும் முன்வந்து ரூ.100 முதல் நன்கொடை அளிக்கலாம். குறிப்பாக தமிழ்த் திரையுலகினர், கலைஞர்கள், தொழிலதிபர்கள் தாராள உள்ளத்துடன் தமிழுக்கு நன்கொடை வழங்க முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹார்வர்டு தமிழ் இருக்கை என்பது தனிப்பட்ட சிலரது பங்களிப்பில் உருவாவதாக இல்லாமல், தமிழகத் தமிழர்கள், தமிழக அரசு, உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஆகிய அனைவரது பங்கும் இருந்தால்தான் அது முழுமை பெறும் என்று தமிழ் இருக்கை அமைப்பின் முதன்மை இயக்குநர்களான மருத்துவர்கள் ஜானகிராமன், திருஞான சம்பந்தம் இருவரும் எடுத்துரைத்தனர். இதையே ‘தி இந்து’ தமிழ் நாளிதழும் இருக்கை தொடர்பான தனது கட்டுரைகள், செய்திகளில் தெரிவித்தது.
தமிழ் இருக்கை கீதம்
நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்புக்குக் கைகொடுக்கும் விதமாக இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையமைப்பில், பழனிபாரதியின் வரிகளில், சீர்காழி சிவசிதம்பரம் - நித்யஸ்ரீ மகாதேவன் பாடிய, அதிகாரப்பூர்வ ‘ஹார்வர்டு தமிழ் இருக்கை’ கீதம் பாடலை தயாரிப்பதில் முழுமையான ஒருங்கிணைப்பையும் ‘தி இந்து’ தமிழ் செய்தது. சென்னையில் நடத்தப்பட்ட தமிழ் இருக்கை கீதம் வெளியீட்டு நிகழ்ச்சியில் இருக்கைக்கான நன்கொடை திரட்டப்பட்டது. இதில், ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் எழுத்தாளர்கள், நீதியரசர்கள் ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம், ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் உட்பட பலர் கலந்துகொண்டு, ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைய நன்கொடை வழங்குமாறு தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
எதற்காக இருக்கை?
தமிழ்நாடு மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், கனடா ஆகிய நாடுகளில் அரசு மொழிகளில் ஒன்றாகக் கோலோச்சுகிறது தமிழ். உலகம் முழுவதும் பரவியும், புலம்பெயர்ந்தும் வாழும் 8 கோடிக்கும் அதிகமான தமிழர்களின் தாய்மொழியாகவும், தொல்காப்பியம் எனும் இலக்கண நூலைக் கொண்ட 2,700 ஆண்டுகள் தொன்மையும் 2,500 ஆண்டுகள் பண்பாட்டுத் தொடர்ச்சி கொண்ட இலக்கிய வளமும் பெற்று விளங்கும் ஒரே உலகச் செம்மொழியாக விளங்குகிறது. எந்நாட்டவரும், எம்மொழியைப் பேசும் மக்களும் ஏற்றுக்கொள்ளும் நன்னெறிகளைக் கொண்ட ‘உலகின் பொது வேதம்’ என ஏற்றுக்கொள்ளப்பட்டு, உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ‘திருக்குறள்’ நூலானது, தமிழின், தமிழரின் வாழ்வியல் அறத்தைச் சுட்டிக்காட்டும் ஆவணமாக இருக்கிறது.
அமெரிக்க மொழியியல் அறிஞரான நோம் சாம்ஸ்கி, ‘‘உலக மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும்” என்று தனது ஆய்வின் மூலம் அழுத்தம்திருத்தமாகக் கூறியுள்ளார். இதற்கு வலுசேர்க்கும் விதமாக ஞானகிரியார் என்ற தமிழ் அறிஞர் உலகின் ஏனைய சில செம்மொழிகளான கிரேக்கம், லத்தீன், எபிரேயம் ஆகிய மொழிகளில் 1,000-க்கும் அதிகமான தமிழ்ச் சொற்கள் இருப்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்.
‘‘இத்தனை சிறப்புகள் கொண்ட தமிழ்மொழிக்கு ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைந்தால் தமிழுக்குக் கிடைக்கும் உலக அங்கீகாரமே வேறு. பெரும் பாரம்பரியம் கொண்ட ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கும் இது பெருமை. தற்போது தமிழக அரசு அளித்திருக்கும் நிதி, இருக்கை அமைவதை உறுதி செய்துவிட்டது. இதன்மூலம் அதிமுக அரசு மிகச்சிறந்த கடமை ஒன்றை ஆற்றி, தனது மொழிப்பற்றைக் காட்டிவிட்டது” என்கிறார் மூத்த தமிழ் எழுத்தாளர் அப்பாத்துரை முத்துலிங்கம். இவர் ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பின் இயக்குநர்களில் ஒருவர். அவர் மேலும் கூறும்போது, ‘‘உலகின் 20 பெரிய மொழிகளுள் தமிழும் ஒன்று. இது செம்மொழியாகவும் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உலக அளவில் தமிழ் மொழிக்கான அங்கீகாரம் உரிய அளவு கிடைக்கவில்லை. பன்னாட்டு ஆய்வாளர்களைக் கவர முடியாததும், அதனால் உலகத்தரம் வாய்ந்த ஆய்வுகள் போதிய அளவில் தமிழில் மேற்கொள்ளப்படாததும் இதற்கான காரணங்களில் அடங்கும்.
நமது பண்டைத் தமிழ் இலக்கியங்கள், செய்யுள் கவிதையாக வடிக்கப்பட்டிருக்கும் நமது பாரம்பரிய சித்த மருத்துவம் ஆகியவற்றுக்கு உலக அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால், உலகமே ஏற்றுக்கொள்ளும் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு இருக்கை தேவை. அங்கே இருக்கை அமையும்போது ஆங்கிலத்தையும், பிற மொழிகளையும் பன்னாட்டினர் கற்க ஆர்வம் காட்டுவதுபோல, தமிழையும் கற்று அதில் ஆய்வு செய்யவும் அதிக அளவில் முன்வருவார்கள். நாமும் நமது மொழியையும் இலக்கியங்களையும் ஆய்வு செய்து பிற பண்பாட்டினருடன் ஆய்வு முடிவுகளைப் பகிர்ந்துகொள்ள முடியும். இது தமிழின் வளர்ச்சிக்கு முக்கியமானது” என்றார்.
மாபெரும் முயற்சிக்கான முதல் விதை
தமிழ் இருக்கைக்கான முதல் விதை அமெரிக்காவில் நடந்த ஓர் இலக்கிய விழாவில் பதியமிடப்பட்டது. அமெரிக்காவின் ஹவாய் தீவில் வசிக்கும் தமிழ்ப் பேராசிரியரான வைதேகி ஹெர்பர்ட் ,18 சங்க நூல்களையும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர். இவரைப் பாராட்ட எடுக்கப்பட்ட விழாவொன்றில் வைதேகியும், அமெரிக்காவில் வசிக்கும் தமிழக மருத்துவர் விஜய் ஜானகிராமனும் பேசிக்கொண்டபோது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் எண்ணம் உருவானது.
தொடர் முயற்சியால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தெற்காசியக் கற்கைகள் (Department of South Asian Studies) துறைத் தலைவரைச் சந்தித்துப் பேசுவதற்கான அழைப்பு கிடைத்தது. ஜானகிராமனும், அவரது நண்பரும் மற்றொரு புகழ்பெற்ற மருத்துவருமான திருஞானசம்பந்தமும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். தொடர் பேச்சுவார்த்தை மூலம் தமிழுக்கு ஓர் இருக்கையை நிறுவ ஹார்வர்டு பல்கலைக் கழகம் ஒப்புக்கொண்டது. தமிழுக்கு இருக்கை அமைவது ஹார்வர்டு மேலும் புகழைக்கூட்டும் எனலாம்.
நன்கொடைக்கு மரியாதை!
தமிழ் இருக்கை அமைய நன்கொடை அளிப்போருக்கு நேரடியாகப் பாராட்டுச் சான்றிதழை அவர்களது வீட்டு முகவரிக்கே அனுப்பிவைக்கிறது ஹார்வர்டு பல்கலைக்கழக நிர்வாகம். இந்தச் சான்றிதழ்கள்.. நன்கொடையாளர்கள் தங்களது வருங்காலத் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்லும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள்!
நன்கொடை செலுத்துவது எப்படி?
தமிழக அரசு தற்போது அளித்துள்ள ரூ.10 கோடியை அடுத்து, ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக ரூ.30 கோடி சேர்ந்துள்ளது. மேலும் தேவை ரூ.10 கோடி. இதை நன்கொடையாளர்கள் அளிப்பதற்கு 244 நாட்கள் அவகாசம் உள்ளது. எங்கே செலுத்துவது, எப்படிச் செலுத்துவது என்று வாசகர்களிடம் இருந்து ஆர்வமான விசாரிப்புகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
நன்கொடைகளை நேரடியாகச் செலுத்த http://harvardtamilchair.org என்ற இணையதளத்துக்குச் செல்லுங்கள். அவ்வாறு செலுத்திய விவரத்தை harvardtamil@thehindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தெரியப்படுத்துங்கள். தமிழால் இணைந்த நாம், தமிழை உலகறியச் செய்யும் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு மகிழ்வுடன் உதவிக்கரம் நீட்டுவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT