Published : 11 Oct 2017 11:12 AM
Last Updated : 11 Oct 2017 11:12 AM
அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள ‘டெங்கு’ நோயாளிகளை சந்தித்து ஹோமியோபதி அரசு மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், ‘டெங்கு’ வராமல் தடுப்பதற்காகவும் ‘கவுன்சலிங்’ வழங்கி வருகின்றனர்.
இந்தியாவில் 439 மருத்துவக் (அலோபதி) கல்லூரிகளில் ஆண்டுக்கு 59,288 மாணவர்கள் எம்பிபிஎஸ் படித்து வெளியேறுகின்றனர். அதுபோல, 192 ஹோமியோபதி கல்லூரிகளில் 13 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். ஹோமியோபதி மருத்துவம் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது. ஹோமியோபதி மருத்துவம் நல்ல பலன் தருவதால், இந்தியாவில் ஹோமியோபதி மருத்துவத்தில் தற்போது சிகிச்சை பெறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
காலரா, வைரஸ் காய்ச்சல் போன்றவை ஹோமியோபதியால் குணமாகின்றன. தற்போது ‘டெங்கு’ காய்ச்சலுக்கும் ஹோமியோபதியில் பலன் கிடைப்பதாக கூறப்படுகிறது. டெங்கு வரும்முன் காக்க தேவையான சிகிச்சைகள் இருப்பதாக, அந்த துறை மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், டெங்கு நோயாளிகள் ஒட்டுமொத்தமாக அலோபதி சிகிச்சையை நம்பி அரசு மருத்துவமனைகளில் குவிவதால் அங்கு இடநெருக்கடி ஏற்பட்டு, சரியான சிகிச்சை கிடைக்காமல் சில நேரம் உயிர் பலி ஏற்படுகிறது.
‘டெங்கு’வுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், தமிழக அரசு ‘டெங்கு’வை கட்டுப்படுத்த அலோபதி சிகிச்சையுடன் தற்போது பக்கவிளைவு இல்லாத ஹோமியோபதி சிகிச்சையையும் ஊக்குவித்து வருகிறது. அதனால், அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள டெங்கு நோயாளிகளுக்கு தற்போது ஹோமியோபதி மருத்துவர்களை கொண்டு ‘கவுன்சிலிங்’ மற்றும் ஹோமியோபதி சிகிச்சை விவரங்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஹோமியோபதி மருத்துவர்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ‘டெங்கு’ , வைரஸ் காய்ச்சல் பாதித்த நோயாளிகளை சந்தித்து விழிப்புணர்வு கவுன்சலிங் வழங்கி வருகின்றனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘டெங்கு’ உள்ளிட்ட மற்ற வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை, திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி குழுவினர் தினமும் சந்தித்து டெங்கு ‘கவுன்சலிங்கை’ வழங்கி வருகின்றனர்.
ஹோமியோபதி பயிற்சி மருத்துவர் இப்ராகிம் கூறியதாவது: 2 மருத்துவர்கள், 5 பயிற்சி மருத்துவர்கள், தினமும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் ‘டெங்கு’ காய்ச்சலுக்கு ஹோமியோபதி மருத்துவத்தைப் பற்றி சொல்கிறோம்.
அவர்களிடம் என்ன நீர் ஆகாரம், உணவு சாப்பிடலாம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம், ‘டெங்கு’ பரவாமல் எப்படியெல்லாம் தடுக்கலாம் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்குகிறோம். ஹோமியோபதி மருத்துவத்தில் மாத்திரைகளை சாப்பிட்டால் ‘டெங்கு’ காய்ச்சல் வராமல் தடுக்கலாம். இதை பற்றியும் நோயாளிகளுக்கு எடுத்துச் சொல்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT