Published : 05 Jun 2023 09:15 PM
Last Updated : 05 Jun 2023 09:15 PM
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், 2016 சட்டமன்ற தேர்தலில் அவர் வெற்றிபெற்றது செல்லும் என அறிவித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்துக்கு நடந்த பொதுத் தேர்தலில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜன் 1,395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளில் பாண்டியராஜன் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆவடி நாசர் 2016-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் இரண்டு நாட்கள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் திமுக வேட்பாளர் ஆவடி நாசர் தரப்பில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது.
அப்போது பாண்டியராஜன், அதிமுக அட்டைப்படம் போட்ட தேர்தல் வாக்குறுதி நோட்டீஸ்களில் 500 ரூபாய் நோட்டுகளை வைத்து வாக்காளர்களுக்கு கொடுக்க முயற்சித்தபோது தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது குறித்து நேரில் ஆஜராகும்படி தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் தவறு எனவும், தனக்கு எந்தவொரு சம்மனும் வரவில்லை என்றும் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆர்.சுப்ரமணியன், குற்றச்சாட்டுகள் போதுமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி ஆவடி நாசர் தொடர்ந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் வெற்றி பெற்றது செல்லும் என உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...