Published : 05 Jun 2023 06:04 PM
Last Updated : 05 Jun 2023 06:04 PM
மதுரை: தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருவிழா குழு அமைக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை ஆணையர் தெரிவித்தார்.
மதுரை அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோயில் திருவிழாவிற்கு தனி நபர்கள் கொண்ட குழு அமைக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் 2017-ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மீறி திருவிழா குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், திருவிழாவை அறநிலையத்துறை நேரடியாக நடத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அறநிலை துறை சார்பில் தவறான தகவல் அளித்ததாக கூறி அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியகவுரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், 'அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருவிழாக் காலங்களில் திருவிழா குழு அமைப்பது தொடர்பாக பல்வேறு புகார்கள், வழக்குகள் வருகின்றன. அறநிலையத் துறை சட்டப்படி திருவிழா குழுக்கள் அமைக்க இடமில்லை. எனவே, எதிர்காலங்களில் திருவிழா குழு அமைக்கக் கூடாது என அனைத்து கோயில் செயல் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது' எனக் கூறப்பட்டிருந்தது.
இதைப் பதிவு செய்து கொண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT