Published : 05 Jun 2023 01:35 PM
Last Updated : 05 Jun 2023 01:35 PM
சென்னை: கண்ணியமிகு காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் அவர்களின் பிறந்தநாளில் இந்நாட்டுக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன் என முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
காயிதே மில்லத்தின் 128-வது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இன்று மலர்களை தூவி மரியாதை செலுத்தியனர். இதனிடையே, காயிதே மில்லத்தின் பிறந்தநாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "கல்லூரிப் படிப்பைக் கைவிட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைசிறந்த நாட்டுப்பற்றாளர்.
ஆட்சிமொழிப் பிரச்சினையில், தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என அரசியல் நிர்ணய அவையில் ஆணித்தரமாக வாதாடிய மொழிக் காவலர். தொகுதிக்குச் செல்லாமலேயே போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் வெற்றிபெறக் கூடிய அளவுக்குச் செல்வாக்கு கொண்டிருந்த தனிப்பெரும் தலைவர்.
அரசியல் நிர்ணய அவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழர்களுக்காகவும் சிறுபான்மைச் சமுதாயத்தினரின் உரிமைகளுக்காகவும் உரக்கக் குரல் எழுப்பிய அரிமா.
"இவ்வளவு பெரிய முஸ்லிம் சமுதாயத்திற்கு இம்மாதிரி ஒரு தலைவர் மீண்டும் கிடைப்பது அரிது" என்று அவரது மறைவின்போது தந்தை பெரியாரால் உருக்கத்துடன் பாராட்டப்பட்ட மாசற்ற மாணிக்கம் - கண்ணியமிகு 'காயிதே மில்லத்' முகம்மது இஸ்மாயில் அவர்களின் பிறந்த நாளில் இந்நாட்டுக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்." என முதல்வர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT